'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்
'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்
UPDATED : ஜூலை 25, 2024 03:19 AM
ADDED : ஜூலை 25, 2024 02:18 AM

புதுடில்லி, 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில், 120 மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆப்பரேஷனில், முன்னணி சமூக வலைதளங்களை தவிர்த்து மிகவும் கவனமான முறையில் குற்றவாளிகள் செயல்பட்டது சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.ஐ., நடத்தி வரும் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து சி.பி.ஐ., அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:
நாடு முழுதும் 120 மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மோசடியில், வினாத்தாள் கசிவு தொடர்பான தகவல் வெளியே வராமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை குற்றவாளிகள் மேற்கொண்டுஉள்ளனர்.
தேர்வு நடக்கும் மையத்திற்குள் காலை 8:02 மணிக்கு நுழைந்த நபர்கள், அங்கிருந்த வினாத்தாள் அடங்கிய பார்சலை பிரித்து படம் பிடித்துள்ளனர். பின், அதை இருந்தபடியே மூடிவைத்துவிட்டு 9:23 மணிக்கு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
வினாத்தாளின் புகைப்படத்தை பிரபலமான சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்வதை தவிர்த்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்களை வேறு வழியில் தொடர்பு கொண்டு வினாத்தாளை அவர்கள் அளித்தது. விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இது நான்கு மையங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படம் தெளிவாக இல்லாததால், பிற மையங்களில் அதை மாணவர்களால் பயன்படுத்த முடியவில்லை.
குற்றவாளிகளிடம் இருந்து 20 லட்சம் ரூபாய்க்கான முன்தேதியிட்ட காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பல மாணவர்கள் முன்பணமாக ஒரு தொகையை கொடுத்தது மட்டுமின்றி முன்தேதியிட்ட காசோலைகளை இந்த இடைத்தரகர்களுக்கு வழங்கிஉள்ளனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.