ADDED : ஜூன் 16, 2024 07:30 AM

கார்வார்: ''எல்லாபூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார், லோக்சபா தேர்தலில் கட்சிக்காக பிரசாரம் செய்யாததால், ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்கட்டும்,'' என, உத்தர கன்னடா பா.ஜ., - எம்.பி., விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தெரிவித்தார்.
உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எல்லாபூர் பா.ஜ., - எம்.எல்.ஏ, சிவராம் ஹெப்பார், ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப் போடவில்லை; லோக்சபா தேர்தலில் கட்சிக்காக பிரசாரம் செய்யவில்லை. கட்சியின் கொள்கைகளில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பது தெளிவாகிறது. ஜனநாயகப்படி அவர் ராஜினாமா செய்வதே ஒரே தீர்வு. ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் நின்று வெற்றி பெறட்டும்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான குற்றச்சாட்டு, அரசியல் சதியின் ஒரு பகுதியாகும். நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருவதால், எடியூரப்பா, இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறேன்.
லோக்சபா தேர்தல் முடிவுகளை பார்த்தால், மாநில அரசு ஏமாற்றம் அடைந்துள்ளது என்பது தெரியும். ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் எந்த வளர்ச்சியும் இல்லை. நிர்வாகத்தில் ஊழல், பாகுபாடு, சிறுபான்மையினரை திருப்திபடுத்துதல், பெரும்பான்மையினரை புறக்கணித்தல் ஆகியவையே இந்த முடிவுக்கான சான்று.
வரும் நாட்களில் வளர்ச்சி மையமாக வைத்து, காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும். சிறுபான்மையினர் தேசிய நீரோட்டத்தில் இருக்க வேண்டும் என்று பல கூட்டங்களில் கூறியுள்ளேன். ஆனால் காங்கிரசின் சதியால், அவர்கள் இம்முறை தேசிய நீரோட்டத்துக்கு வரவில்லை.
நம் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. வாக்களிப்பதிலும் அவர்கள் தேசிய நீரோட்டத்துக்கு வர வேண்டும். அதை தவறாக பயன்படுத்துவதை காங்கிரஸ் கைவிட வேண்டும்.
உத்தர கன்னடா லோக்சபா தொகுதியின் கித்துார், கானாபூர் உட்பட அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், மக்கள் எதிர்பார்ப்பை மீறி ஆதரவு அளித்துள்ளனர். இதனால், முதன் முறையாக காங்கிரசுக்கு எதிராக பா.ஜ., மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
மோடியை பிரதமராக்கும் வகையில், தேர்தலை பண்டிகையாக மக்கள் கொண்டாடினர். ம.ஜ.த.,வின் ஆதரவால், இம்முறை வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி சாத்தியமாகி உள்ளது.
மத்திய அரசின் பல திட்டங்களின் பலன்கள், அதிகளவில் மக்களை சென்றடைய வேண்டும். பெரிய வரலாற்று பகுதிகளின் வளர்ச்சிக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன். மாவட்டத்துக்கு புதிய திட்டங்கள் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.