ADDED : ஜூலை 12, 2024 06:58 AM
* சிக்கினால் சிதறு தேங்காய்
பல பள்ளிகளின் ஆசிரியைகளுக்கு தொல்லை கொடுப்பதாக ஒரு கல்வி அதிகாரி மீது புகார்கள் பரவி வருகிறது. ஆனால், மாவட்ட அதிகாரிகளுக்கு, எந்த புகாரும் வரவில்லையாம்; வந்தால் விசாரிக்கலாமென சொல்லிட்டார்களாாம்.
மாலுாரில் 'டார்ச்சர்' கொடுத்து 'தர்ம அடி' வாங்கியவர், துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு இடம் மாறியவராச்சே; இங்கேயும் வாலை சுருட்டி வைக்காமல் ஆட்டம் போட்டு வருவதாக சொல்றாங்க. கோல்டு தாலுகாவிலும் இவர் நீடிக்க மாட்டார். சிக்கினா, சிதறு தேங்காய் போல தான் வெளியேற வேண்டி இருக்குமாம்.
------
* டில்லி பறந்த அதிகாரி!
மண் மலை பிசினஸ் பொன்னகரில், 'எபெக்ட்' ஆகவில்லை. ஆனால் தேசிய தலைநகரில் மும்முரமாக வேலை நடக்கிறது. கோல்டு மைன்சுக்கு வடமாநிலத்தை சேர்ந்தவரு தான் ஸ்பெஷல் ஆபீசரு. இவரிடம் தான், நிர்வாக முழு பொறுப்பு ஒப்படைக்க போறாங்க.
ஏதோ சீக்ரெட் பேசணும்னு பிளைட்டில் பறந்து வர திடீர் அழைப்பு வந்துள்ளது. அவரும் நேஷனல் கேபிடலுக்கு விமானத்தில் பறந்தார். விரைவில் மண்ணை அள்ளி அனுப்பும் வேலைக்கு ஆளெடுக்க போறாங்களாம். இதுக்கான டிஸ்கஷன் நடந்திருக்கு. எப்படியும் நுாற்றுக்கும் அதிகமான, 'ஜேசிபி' எந்திரங்கள் வரப் போகுது. மண் மலை தரைமட்டம் ஆகும் நேரம் வந்தாச்சு.
------
* வழி பிறக்குமா?
பேலன்ஸ் தொகைக்கு வழக்கு தொடுத்த முன்னாள் தொழிலாளர் சங்கம் ரெண்டாக உடைஞ்சிடுச்சு. தென் பகுதிக்காரங்க ஒரு பக்கம், வடக்கு பகுதிக்காரங்க இன்னொரு பக்கம்.
கோர்ட் தீர்ப்பு வரும் வரையில் வக்கீலை நம்பினவங்க, அவரை ஒதுக்கி வைத்து, காவி ஆட்சியாளர்களை சந்திக்க வடக்கு அணி தயாராகிட்டாங்க. இதுக்காக கோலாரின் புல்லுக்கட்டு எம்.பி.,யை சந்திச்சாங்க. செங்கோட்டை கனரக தொழில் மந்திரியின் உதவியை நாடுறாங்க.
நிலுவைத் தொகை கிடைக்க இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேணுமோ. வீடு பிரச்னையும் தீரல. நிலுவைத் தொகையும் வரல. இதுக்கு எப்போ வழி பிறக்க போகுதோ?
-------
* ராஜகோபுரம் எப்போது?
பெரிய தேர்தல் அறிவிப்புக்கு முன் அவசர அவசரமாக ரா.பேட்டை ஏழுமலையான் கோவில் ராஜ கோபுரம் அமைக்க பூஜை நடத்தினாங்க. சில கோடியில் வேலை நடக்க அரசு நிதியும் ஒதுக்கியாச்சி என்றாங்க. ஆனால், நான்கு மாதம் கடந்தும் வேலை மட்டும் துவங்கவில்லை. வந்த பணம், வேறு வேலைக்கு மாற்றம் செய்து விட்டனரா என்ற அச்சம் பக்தர்களுக்கு ஏற்பட்டிருக்குது.
தற்போது, கோவில் வளாகத்தில் பல லோடு ஜல்லி, மணல் உள்ளது. இது கோபுர வேலைக்காகவா அல்லது சாலை பணிகளுக்காகவா என்பது தெரியல.
கோபுர பணிகள் துவங்குவது எப்போது; முடிப்பது எப்போது; ஒதுக்கியுள்ள நிதி விபரம் என அனைத்துமே வெளிப்படையாக அறிவிப்பு பலகை வைப்பாங்களான்னு பக்தர்கள் எதிர்பாக்குறாங்க.
***