ADDED : ஜூன் 23, 2024 06:23 AM

பெங்களூரு: காலியாக உள்ள மூன்று சட்டசபை, ஒரு மேலவைக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட, 'மாஜி'க்களும், வாரிசுகளும் முட்டி மோதுகின்றனர்.
இம்முறை நடந்த லோக்சபா தேர்தலில், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என எண்ணிய அரசியல் கட்சிகள், தகுந்த வேட்பாளர்கள் கிடைக்காததால், பெரும் தலைவர்களை களமிறக்கின.
அனைவரும் வெற்றி
பா.ஜ., -- ம.ஜ.த., காங்கிரஸ் தரப்பில் மொத்தம் மூன்று எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.எல்.சி., ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றனர்.
அதாவது, சென்னப்பட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., குமாரசாமி மாண்டியாவிலும்; ஷிகாவி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை ஹாவேரியிலும்; சண்டூர் காங்., - எம்.எல்.ஏ., துக்காராம், பல்லாரியிலும்; பா.ஜ., - எம்.எல்.சி., கோட்டா சீனிவாச பூஜாரி உடுப்பி - சிக்கமகளூரிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்.பி.,யாகினர்.
இதனால் இப்பதவிகளை நான்கு பேரும் ராஜினாமா செய்தனர். இதற்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்குள் இப்பதவிகளுக்கு இப்போதே பலரும் 'துண்டு' போட துவங்கி உள்ளனர்.
யாருக்கு வாய்ப்பு
சென்னபட்டணா தொகுதியை தக்க வைத்துக் கொள்ள, தனது மகன் நிகிலை நிறுத்த குமாரசாமி நினைக்கிறார்.
ஆனால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக தன்னை களமிறக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர், கட்சி மேலிட தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார்.
எம்.பி.,யான பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், கிடைக்காததால், ஷிகாவியில், தனது மகன் பரத் பொம்மையை நிறுத்த 'சீட்' கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதுபோன்று சட்டசபை, லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவிய ஸ்ரீராமுலு, சண்டூர் தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
மேலவை எம்.எல்.சி.,யாக இருந்த கோட்டா சீனிவாச பூஜாரி எம்.பி.,யானதால், கடலோர பகுதியில், சீட் கேட்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ., பிரமோத் மத்வராஜ், எம்.எல்.சி., பதவி எதிர்பார்க்கிறார்.
ஆனால், லோக்சபா தேர்தலில் ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்ததால், இதிலும், இரு கட்சிகளும் சேர்ந்து ஆலோசித்து, கூட்டணி வேட்பாளர்களை நிறுத்துவார்களா அல்லது சென்னபட்டணாவை விட்டுக்கொடுத்து விட்டு, மற்ற தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுமா என்பது, தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் தெரியவரும்.