தேக்கடி பெரியாறு புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிதி மோசடி விசாரணை
தேக்கடி பெரியாறு புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிதி மோசடி விசாரணை
ADDED : ஜூலை 12, 2024 08:28 PM
மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் பெரியாறு புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை 2004ல் அமைக்கப்பட்டது. புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பு, உதவி ஆகிய நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.
தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணியரிடம் வசூலிக்கப்படும் கட்டணம், பல்வேறு ஏஜன்சிகளிடம் இருந்து கிடைக்கும் பணம் ஆகியவை அறக்கட்டளைக்கு முக்கிய வருமானமாகும். அத்தொகையை கொண்டு பல்வேறு பராமரிப்பு பணிகளுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு, பொருட்கள் வாங்கப்படுகின்றன.
அதற்கு அரசின் விதிமுறைகள்படி டெண்டர் கோரப்படுவதில்லை. மாறாக வனத்துறையைச் சார்ந்த அதிகாரிக்கு முன் கூட்டியே தொகை அனுமதிக்கப்படும். இது போன்று வழங்கிய தொகைகளால், அறக்கட்டளை நிதி மோசடி ஏற்ப்பட்டுள்ளது என புகார் எழுந்தது.
அதனை தனியார் கம்பெனி தணிக்கை செய்து உறுதி செய்தனர். இது குறித்து அரசு ஊழியர்கள் அல்லாத பணியாளர்கள் சங்கம் புகார் அளித்ததால் விசாரணைக்கு வனத்துறை அமைச்சர் சசீந்திரன் உத்தரவிட்டார். அதன்படி அறக்கட்டளையைச் சேர்ந்த நிதித்துறை கூடுதல் செயலர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு சோதனையிட்டு விசாரித்தனர்.
அதில் பல்வேறு விதங்களில் நிதி மோசடி நடந்தது தெரியவந்தது. மேற்கொண்டு விசாரணை நடக்கிறது.