ADDED : செப் 13, 2025 02:23 AM

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கண்ணுார் அருகே மலைப்பாம்பை கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேர் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கண்ணுார் மாவட்டம் பனப்புழா பகுதியில் சிலர் மலைப்பாம்பை கொன்று இறைச்சி சமைப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வனத்துறை அதிகாரி சனுாப் கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் பனப்புழா பகுதிக்கு சென்றனர். சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டில் சோதனை செய்தபோது அங்கு இருவர் மலைப்பாம்பு இறைச்சியை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மாதமங்கலம் பனப்புழாவை சேர்ந்த பிரமோத் 40, வந்தனஞ்சேரியை சேர்ந்த பினிஷ் 37, என்பதும் தெரியவந்தது. அவர்களது வீட்டின் அருகே உள்ள ரப்பர் தோட்டத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த மலைப்பாம்பை பிடித்து வெட்டி சமைத்துள்ளனர். அந்த வீட்டிலிருந்து மலை பாம்பு உடலின் சில பாகங்கள் மற்றும் சமைத்து வைத்திருந்த இறைச்சி உள்ளிட்டவற்றை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.