இடுக்கியில் தெருநாய்கள் கடித்து 3379 பேர் பாதிப்பு
இடுக்கியில் தெருநாய்கள் கடித்து 3379 பேர் பாதிப்பு
ADDED : ஜூன் 22, 2025 09:17 PM
மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதத்தில் தெருநாய்கள் 3379 பேரை கடித்ததாக சுகாதாரதுறை கணக்கெடுப்பில் தெரியவந்தது.
இம்மாவட்டத்தில் தெருநாய்கள், அவை கடித்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூணாறில் கடந்த மாதம் தெரு நாய் சுற்றுலா பயணிகள் உட்பட 16 பேரை கடித்தது. தேவிகுளத்தில் அரசு தமிழ் மேல்நிலை பள்ளி வளாகத்தில் கடந்த வாரம் ஆறு மாணவிகளை நாய் கடித்தது. இந்த மாதம் நேற்று முன்தினம் வரை 333 பேரை தெருநாய்கள் கடித்த நிலையில் ஜனவரி 1 முதல் நேற்று முன்தினம் வரை 3379 பேரை நாய்கள் கடித்ததாக சுகாதார துறை கணக்கெடுப்பில் தெரியவந்தது.
ஏ.பி.சி. மையம் இல்லாத மாவட்டம்
தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இடுக்கி தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஏ.பி.சி. மையங்கள் (அனிமல் பெர்த் கன்ட்ரோல்) உள்ளன. மாநிலத்தில் 2022 முதல் இவை செயல்பட துவங்கின. ஊராட்சிகள் தோறும் இவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு இரண்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு மையம் என நிர்ணயிக்கப்பட்ட போதும் செயல்படுத்த முடியவில்லை. பின்னர் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை பயன்படுத்தி மாவட்ட ஊராட்சி அளவில் இம்மையம் அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி மாவட்டத்தின் தலைமையிடமான குயிலிமலையில் மாவட்ட ஊராட்சி வழங்கிய அரை ஏக்கர் நிலத்தில் மையம் அமைப்பதற்கு ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் திட்டம் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது.