வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் 4,300 இந்திய கோடீஸ்வரர்கள்
வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் 4,300 இந்திய கோடீஸ்வரர்கள்
ADDED : ஜூன் 19, 2024 02:00 PM

புதுடில்லி: இந்தியாவில் இருந்து 4,300 கோடீஸ்வரர்கள் வெளியேறுவார்கள் . அதில் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு எமீரேட்சில் குடிபெயர்வார்கள் என சர்வதேச நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 5,100 கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. கோடீஸ்வரர்கள் இடம்பெயர்வில், சர்வதேச அளவில், பிரிட்டன், சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முந்தி உள்ளது. அதேநேரத்தில், கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை ஆனது இந்தியாவை விட சீனா 30 சதவீதம் தான் அதிகம் உள்ளது.
இந்நிலையில், சர்வதேச முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.
அதன்படி, 2024ல் இந்தியாவில் இருந்து 4,300 கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர உள்ளனர். பெரும்பாலானவர்கள் யுஏஇ.,க்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 5,100 கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு சென்றனர். இவ்வாறு செல்பவர்கள், இந்தியாவில் வீடு ஒன்றையும், தங்கள் தொழில் நலன் மற்றும் வீடு ஒன்றை தக்க வைத்து கொள்கின்றனர். இதன் மூலம் இந்தியாவுடன் பொருளாதார உறவை தொடர்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இடம்பெயர்வுக்கான காரணம் என்ன
கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில், பாதுகாப்பு, நிதி சார்ந்த விஷயங்கள், வரி பலன்கள், ஓய்வுக்கு பிந்தைய திட்டங்கள், தொழில் வாய்ப்புகள், சாதகமான வாழ்க்கை சூழல், குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்பு, சுகாதார திட்டங்கள் மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவை காரணமாக அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
உலகளவில்
2024 ம் ஆண்டு உலகளவில் 1,28,000 கோடீஸ்வரர்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் விருப்பமான இடமாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் உள்ளது.