பயங்கரவாதத்துக்கு எதிரான பிரசாரம் வெளிநாடு பறந்தனர் சர்வ கட்சி எம்.பி.,க்கள்
பயங்கரவாதத்துக்கு எதிரான பிரசாரம் வெளிநாடு பறந்தனர் சர்வ கட்சி எம்.பி.,க்கள்
ADDED : மே 22, 2025 12:52 AM
புதுடில்லி:'ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க சஞ்சய் ஜா மற்றும் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான எம்.பி.,க்கள் குழு நேற்று புறப்பட்டன.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து உலக நாடுகளிடம் விவரிக்க, அனைத்துக் கட்சிகளை சேர்ந்த ஏழு எம்.பி.,க்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுஉள்ளது.
பா.ஜ., - எம்.பி.,க்கள் ரவிசங்கர் பிரசாத், வைஜெயந்த் பாண்டா, காங்கிரசின் சசி தரூர், ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் ஜா, தி.மு.க.,வின் கனிமொழி, சரத் பவாரின் தேசியவாத காங்., எம்.பி., சுப்ரியா சுலே, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையில் ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டன.
32 நாடுகள்
ஒவ்வொரு குழுவிலும் 6 - 7 எம்.பி.,க்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பயணம் செய்ய உள்ளன.
இந்நிலையில், சஞ்சய் ஜா தலைமையிலான ஒன்பது பேர் அடங்கிய முதல் எம்.பி.,க்கள் குழு தங்கள் பயணத்தை நேற்று துவங்கியது. இதில், பா.ஜ., திரிணமுல் காங்., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், முன்னாள் எம்.பி., சல்மான் குர்ஷித் மற்றும் முன்னாள் துாதர் மோகன் குமார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
டில்லி விமான நிலையத்தில் இருந்து காலை 11:40 மணிக்கு புறப்பட்ட இந்த குழு, ஜப்பான், தென்கொரியா, மலேஷியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளது.
கனிமொழி குழு
அடுத்ததாக, ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு, நேற்றிரவு 9:00 மணிக்கு மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு புறப்பட்டது. ஏழு பேர் அடங்கிய இந்தக் குழு, ஆப்ரிக்க நாடான, காங்கோ, சியாரா லியோன் ஆகிய நாடுகளுக்கு செல்கிறது.
இதில், பா.ஜ., முஸ்லிம் லீக், பிஜு ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த இரண்டு குழுக்களும், வரும் 31ம் தேதி பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்யா புறப்படுகிறது. இந்தக் குழு ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா நாடுகளுக்கு செல்கிறது. இந்த மூன்று குழுக்களைச் சேர்ந்த எம்.பி.,க்களை, வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.