ADDED : பிப் 24, 2024 11:36 PM

அமராவதி: ஆந்திராவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் - நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
வரும் ஏப்., - மே மாதங்களில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார்.
இந்நிலையில், எதிர் வரும் ஆந்திர சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துஉள்ளனர்.
இதற்கான அறிவிப்பை நேற்று, அவர்கள் கூட்டாக வெளியிட்டனர்.
இதன்படி, ஆந்திர சட்டசபையில் மொத்தமுள்ள, 175 தொகுதிகளில், 94ல் தெலுங்கு தேசமும், 24ல் ஜனசேனாவும் போட்டியிட உள்ளன. மீதமுள்ள, 57 தொகுதிகளில் தொகுதி பங்கீடு குறித்து பின் முடிவு செய்யப்படும் என்றும் இரு கட்சிகளின் தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.
இக்கூட்டணியில், பா.ஜ., இணையும் என, தகவல் வெளியாகி உள்ளது. அதற்காகவே, 57 தொகுதிகளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை என, கூறப்படுகிறது.
இதற்கிடையே, லோக்சபா தேர்தலில், ஆந்திராவில் மொத்தமுள்ள, 25 தொகுதிகளில், ஜனசேனாவுக்கு மூன்று தொகுதிகளை தெலுங்கு தேசம் ஒதுக்கி உள்ளது.
பா.ஜ.,வின் முடிவுக்கேற்ப, மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்குவது குறித்து, தெலுங்கு தேசம் முடிவு செய்யும் என, கூறப்படுகிறது.

