ADDED : ஜூன் 14, 2025 01:19 AM
அமராவதி : ஆந்திராவில், பள்ளி செல்லும் மாணவ- - மாணவியரின் தாய்மார்களுக்கு ஆண்டுதோறும், 15,000 ரூபாய் வழங்கும், 'தள்ளிக்கி வந்தனம்' திட்டத்தை மாநில அரசு துவங்கியுள்ளது.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது சந்திரபாபு நாயுடு, 'சூப்பர் சிக்ஸ்' நலத்திட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகை, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட ஆறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில், 'தள்ளிக்கி வந்தனம்' என்ற திட்டமும் இடம்பெற்றது.
அதாவது, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- - மாணவியரின் தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுதோறும், 15,000 ரூபாய் வழங்குவதே, 'தள்ளிக்கு வந்தனம்' எனப்படும், 'தாய்க்கு வணக்கம்' திட்டம். இதற்காக ஆந்திர அரசு, 8,475 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.
இதுகுறித்து அரசு செயலர் கோனா சசிதர் கூறுகையில், ''இத்திட்டத்தால் 67 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், 43 லட்சம் தாய்மார்களும் பயனடைவர். இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பயனடையும்,'' என்றார்.