மலை மகாதேஸ்வரர் மலைக்கு வரும் பக்தர்களுக்கு விலங்கு விழிப்புணர்வு
மலை மகாதேஸ்வரர் மலைக்கு வரும் பக்தர்களுக்கு விலங்கு விழிப்புணர்வு
ADDED : ஜன 27, 2024 12:27 AM

சாம்ராஜ் நகர், -மலை மகாதேஸ்வரா கோவிலுக்கு வேகமாகச் செல்லும் வாகனங்களில் சிக்கி விலங்குகள் இறப்பதைத் தடுக்க, வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மலை மகாதேஸ்வரா கோவிலுக்கு வரும் பக்தர்கள், குரங்குகளுக்கு எல்லா இடங்களிலும் பழங்கள், காய்கறிகள், பிற உணவுப் பொருட்களை வழங்குகின்றனர். சிலர் வாகனத்தில் இருந்து உணவுப் பொருட்கள், பழங்களை துாக்கி வீசுகின்றனர்.
இதை சாப்பிட சாலைக்கு வரும் குரங்குகள், பின்னால் வரும் வாகனங்களில் சிக்கி, கை, கால்கள் உடைந்து, உயிரும் இழக்கின்றன.
இது தவிர, திருவிழா, அமாவாசை நாட்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், நடுரோட்டில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். பின், இலைகள், உணவுகளை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். இவற்றைச் சாப்பிட வரும் வன விலங்குகள், வாகனங்களில் சிக்கி பலியாகின்றன.
வன விலங்குகள் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில், சிலர் வேகமாக செல்கின்றனர். மலை மகாதேஸ்வரர் மலையில் நடக்கும் திருவிழாவின்போது, இரவு முழுதும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற நேரங்களில் சாலையை கடக்கும்போது விலங்குகள் காயமடைகின்றன அல்லது இறக்கின்றன.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வனத்துறை சார்பில், வன விலங்கு சரணாலயங்களில் வாகனங்கள் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால், இது இங்கு பின்பற்றப்படுவதில்லை. ஆங்காங்கே பெயர் பலகைகளை நிறுவி, விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், பயனில்லை.
மகாதேஸ்வர் மலைக்கு செல்லும் சாலையில் சனிமஹத்ஜா கோவில், பொன்னாச்சி கிராஸ், ஒன்பதாவது குறுக்கு ரங்கசாமி சாலை, ஹலல்லா, மாவினஹல்லா போன்ற இடங்களில் வாகனங்கள்நிறுத்தப்படுகின்றன.
சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என, வாகன ஓட்டிகளும் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 38 இடங்களில் வழிகாட்டிப் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மகாதேஸ்வரர் மலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. வன விலங்குகள், பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படாத வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே சில இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்க இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.

