ஆப்., சிந்துார் வெறும் அதிரடி அல்ல புது இந்தியாவின் முகம்: மோடி
ஆப்., சிந்துார் வெறும் அதிரடி அல்ல புது இந்தியாவின் முகம்: மோடி
ADDED : மே 25, 2025 11:30 PM
புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்துார் வெறும் அதிரடி அல்ல; புது இந்தியாவின் முகம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
துருக்கி பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பிரதமர் மோடி கூறியதாவது:
தற்போது, நம் நாடு முழுதும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறது, ஆவேசம் நிறைந்திருக்கிறது, உறுதிப்பாட்டோடு இருக்கிறது.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, நம் படைகள் வெளிப்படுத்திய வீரம், நம்மை தலைநிமிர வைத்துள்ளது.
ஆப்பரேஷன் சிந்துார் என்பது ஒரு ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, இது நம் உறுதிப்பாட்டையும், இனி இதுதான் புதிய நடைமுறை என்பதையும் உலகுக்கு காட்டி உள்ளோம்.
நாடு முழுதும் தேசபக்தி உணர்வையும், இது நிரப்பியுள்ளது.
பலர் தங்கள் குழந்தைகளுக்கு சிந்துார் என பெயரிடும் அளவுக்கு, நாட்டு மக்களிடம் இது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இந்த நடவடிக்கைகளின்போது பயன்படுத்தப்பட்டன.
விடுமுறைகளுக்கு இனி, நம் நாட்டில் உள்ள பகுதிகளுக்கே செல்வோம், வெளிநாடுகளுக்கு செல்ல மாட்டோம் என்று பலரும் கூறியுள்ளனர். அதுபோல, நம் நாட்டிலேயே திருமணம் செய்வோம் என்றும் பலர் கூறியுள்ளனர்.
இதுதான் நம் நாட்டின் உண்மையான பலம். மனங்கள் இணைவதுதான் மக்களின் பங்களிப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.