ADDED : ஜூன் 08, 2024 05:23 PM

புதுடில்லி: டென்மார்க் பிரதமர் மேட் ப்ரெடெரிக்சன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் பிரதமர் ஆக இருப்பவர் மேட் ப்ரெடெரிக்சன். இவர் நேற்று மாலை குல்டோர்வெட் சதுக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் தாக்கினார். இதனால், அவர் கீழே விழுந்ததாக தெரிகிறது. உடனடியாக அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் காரணமாக மேட் ப்ரெடெரிக்சன் அதிர்ச்சி அடைந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இந்த சம்பவத்தால், பிரதமர் சற்று அழுத்தத்துடன் காணப்பட்டார். பின்னர் பாதுகாப்பு வளையத்துடன் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்து உள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் தேர்தல் டென்மார்க்கில் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்லோவேகியா பிரதமர் ராபர்ட் பிகோ கடுமையாக தாக்கப்பட்டார். அதில், படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்தார்.
கண்டனம்
டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: டென்மார்க் பிரதமர் மெட் ப்ரெடெரிக்சன் தாக்கப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். எனது நண்பர் மேட் ப்ரெடெரிக்சன் நல்ல உடல்நலன் பெற வேண்டுகிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.