ADDED : ஜன 10, 2024 12:07 AM

ராய்ச்சூர் : திருட்டு வழக்கு தொடர்பாக, சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் 'மப்டி'யில் இருந்த போலீசார் விசாரித்தபோது, அங்கிருந்த திருடர்களின் கூட்டாளிகள் போலீசாரை தாக்கினர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ராய்ச்சூர் மாவட்டம், சுங்கனுார் கிராமத்தில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக, பாலகனுார் போலீஸ் நிலைய ஏட்டுகள் மஞ்சுநாத், கோபால் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் கூடூரூர் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர்.
இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், போலீசார் சந்தேகமடைந்தனர். இதை உணர்ந்த மர்ம நபர்கள் இருவரும், போலீசாரை தள்ளிவிட்டு மஸ்கி நகரை நோக்கி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசாரை வால்மீகி சதுக்கம் அருகே, கல், சுத்தியலால் தாக்கினர்.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்தும் தடுக்கவில்லை. தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள, போலீசார் அவர்களிடம் இருந்து தப்பித்து, கடை ஒன்றுக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டனர்.
அங்கிருந்தபடி, பாலகனுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மாவட்ட எஸ்.பி., நிகில் கூறியதாவது:
சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. அவர்களை விரட்டிச் சென்றபோது போலீசார் தாக்கப்பட்டு உள்ளனர்.
குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. போலீசார் தாக்கப்படும் காட்சிகள், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருடர்கள் தாக்கியதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போலீசார். இடம்: ராய்ச்சூர்.

