வாடிக்கையாளர் பணத்தை திருடி பங்குச்சந்தையில் முதலீடு: ராஜஸ்தானில் பெண் அதிகாரி துணிகரம்
வாடிக்கையாளர் பணத்தை திருடி பங்குச்சந்தையில் முதலீடு: ராஜஸ்தானில் பெண் அதிகாரி துணிகரம்
UPDATED : ஜூன் 05, 2025 10:22 PM
ADDED : ஜூன் 05, 2025 10:19 PM

கோடா: வாடிக்கையாளரின் பிக்சட் டெபாசிட் பணத்தை, அவர்களுக்கு தெரியாமல் திருடி பங்குச்சந்தையில் முதலீடு செய்து மோசடி செய்த பெண் அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொதுவாக, மக்கள் தங்களின் எதிர்காலத்திற்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் வங்கிகளில் பணம் போட்டு வைப்பதையே மிகவும் பாதுகாப்பானதாக கருதி வருகின்றனர். இதனடிப்படையில் பலர் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால், அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் வகையில் ஒரு சில அதிகாரிகளின் செயலால் வங்கிகளுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் ராஜஸ்தானின் கோடா நகரில் செயல்படும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கிளையின் அதிகாரியாக(Relationship Manager) பணிபுரிபவர் சாக்ஷி குப்தா. இவர், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் 41 வாடிக்கையாளர்களின் 101 பிக்சட் டெபாசிட் கணக்கில் இருந்து பணத்தை திருடி பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். ரூ.4.58 கோடி வரை பணம் திருடி உள்ளார். சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த திருட்டு தெரியக்கூடாது என்பதற்காக, வங்கியில் அவர்கள் பதிவு செய்த மொபைல் எண்ணையும் மாற்றினார். இதனால், வாடிக்கையாளர்களுக்கு எந்த குறுஞ்செய்தியும் செல்லவில்லை.
ஆனால், பங்குச்சந்தையில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால், திருடிய பணத்தை அவரால் வங்கிக்கணக்கில் மீண்டும் செலுத்த முடியவில்லை. வாடிக்கையாளர் ஒருவர் தேவைக்காக பணத்தை எடுக்க வங்கிக்கிளையை அணுகி உள்ளார். அப்போது அவரது கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.இதனையடுத்து நடந்த விசாரணையில் சாக்ஷி குப்தாவின் திருட்டு அம்பலமானது. இதனையடுத்து சகோதரி திருமணத்தில் இருந்த சாக்ஷி குப்தாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.