பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் ரூ.12,369 கோடி!: மகளிருக்கு 100 தனி கழிப்பறைகள் அறிவிப்பு
பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் ரூ.12,369 கோடி!: மகளிருக்கு 100 தனி கழிப்பறைகள் அறிவிப்பு
ADDED : பிப் 29, 2024 11:04 PM

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் 2024 - 25ம் ஆண்டிற்கான பட்ஜெட், 12 ஆயிரத்து, 369 கோடியே, 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், மகளிருக்கு 100 தனி கழிப்பறைகள், விமான நிலையங்களில் இந்திரா உணவகங்கள், பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவிக்காலம், 2020 செப்டம்பரில் முடிந்தது. அதன்பின், தேர்தல் நடக்கவில்லை. இதனால், 2021 - 22, 2022 - 23, 2023 - 24 மாநகராட்சி பட்ஜெட்டை அதிகாரிகளே தாக்கல் செய்தனர்.
இதுபோன்று, 2024 - 25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, மாநகராட்சி நிதி பிரிவு சிறப்பு கமிஷனர் சிவானந்த கலகேரி நேற்று நகரின் டவுன் ஹாலில் தாக்கல் செய்தார்.
கவர்ச்சி திட்டங்கள்
கடந்தாண்டு, 11 ஆயிரத்து 157 கோடியே 83 லட்சம் ரூபாய்க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்தாண்டு, 12 ஆயிரத்து 369 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்டது. இது, கடந்தாண்டை விட 1,211.63 கோடி ரூபாய் கூடுதலாகும்.
அதே நேரம், 12 ஆயிரத்து 371 கோடியே 63 லட்சம் ரூபாய் வருவாய் காண்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2.17 கோடி ரூபாய் உபரி பட்ஜெட் ஆகும்.
சட்டசபை தேர்தலை ஒட்டி, பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மகளிர் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூல் பாதுகாப்பு, குப்பை நிர்வகிப்பு, சாலை மேம்பாடு, நடை மேம்பாலம் போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு
இது தவிர, 'பிராண்ட் பெங்களூரு' திட்டத்தின் கீழ், சீரான போக்குவரத்து, துாய்மை, பசுமை, சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், நீர் பாதுகாப்பு உட்பட எட்டு பிரிவுகளாக பிரித்து, உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள, 1,580 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலை செய்யும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள்; திருநங்கையருக்கு ஆதரவற்றோர் விடுதி; ஆதரவற்ற முதியோருக்கு விடுதி; அனைத்து வர்க்கத்தினருக்கு வீடு கட்டிக்கொள்ள நிதி; மகளிருக்கு 100 தனி கழிப்பறைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மேலும், இந்திரா உணவகங்களை, சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில், பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பட்ஜெட் போன்று, இந்திய அரசியல் சாசன முகப்பு உரை, பட்ஜெட்டின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரை புகழ்பாடும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
பட்ஜெட்டுக்கு நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங், ஒப்புதல் வழங்கினார். இது, ஓரிரு நாளில் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், அனைத்து மண்டல கமிஷனர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
(பட்ஜெட் முழு விபரம் 2ம் பக்கம்)

