காங்கிரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தவில்லை பா.ஜ., ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
காங்கிரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தவில்லை பா.ஜ., ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
ADDED : ஜன 26, 2024 11:57 PM

பெங்களூரு, -''காங்கிரஸ்க்கு நான் நஷ்டம் ஏற்படுத்தவில்லை'' என, ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.
காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் பா.ஜ.,வில் இணைந்த, ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
கடந்த எட்டு மாதங்களாக, காங்கிரசில் கட்சியில் இருந்தேன். நான் எந்த சூழ்நிலையில், அந்த கட்சிக்கு சென்றேன் என்று எல்லாருக்கும் தெரியும். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் என்னை மதிப்புடன் நடத்தினர். தற்போது பா.ஜ.,வில் மீண்டும் இணைந்து இருப்பதால், காங்கிரஸ் கட்சியை பற்றி குறை சொல்ல மாட்டேன்.
நான் காங்கிரசில் இணைந்ததை, என் தொண்டர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எடியூரப்பா, விஜயேந்திரா என்னிடம் தொடர்ந்து பேசினர். பா.ஜ., மேலிட தலைவர்களும், நான் பா.ஜ.,வுக்கு திரும்ப வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இதனால் எனது தாய் வீட்டிற்கு திரும்பி வந்து உள்ளேன்.
பலன்
இந்த முடிவை திடீரென எடுக்கவில்லை. கடந்த ஒன்றரை மாதமாக ஆலோசனை நடந்தது. காங்கிரசில் இருந்தபோது, என் வேலையை நான் செய்தேன். அந்த கட்சிக்கு எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை.
பா.ஜ.,வில் இருந்து நான் விலகியதால், கட்சிக்கு என்னென்ன பாதிப்பு ஏற்பட்டது என்று, பா.ஜ., தலைவர்களுக்கு தெரியும். நான் 35,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன்.
அதை ஒப்புக்கொள்கிறேன். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் என்னால் காங்கிரஸ் கட்சிக்கு பலன் கிடைத்தது.
மரியாதை தருவதாக...
பதவி மீது எனக்கு ஆசை இல்லை. முதல்வர் சித்தராமையா, பெலகாவி லோக்சபா தொகுதி வேட்பாளர் என்று அறிவித்தார்.
உடனடியாக வேண்டாம் என்று கூறினேன். அரசியலில் லாபம், நஷ்டத்தை பார்ப்பது இல்லை. எனக்கு மரியாதை தருவதாக, பா.ஜ., மேலிட தலைவர்கள் கூறியதால், இங்கு திரும்பி வந்து உள்ளேன்.
ராமர் கோவிலை விஷயத்தை, அரசியலாக்கக் கூடாது என்று தான் கூறி இருந்தேன். பா.ஜ., அரசியல் செய்வதாக சொல்லவில்லை. ராமர் கோவிலுக்காக போராட்டம் நடத்தியவன் நான். மாநிலம் முழுதும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்.
லிங்காயத் சமூகத்தை அழிக்கும் முயற்சியில், பா.ஜ., ஈடுபடுவதாக கூறவில்லை. ஒரு சிலர் ஈடுபடுகின்றனர் என்று தான் கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

