ADDED : ஜன 27, 2024 11:08 PM
ஹாவேரி: வேறு ஒருவருடன் பழகுவதாக சந்தேகம் அடைந்து, காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார்.
ஹாவேரி மாவட்டம், ஷிகாவியின் மகேஷ் மைசூரு, 22. இவரது காதலி லட்சுமி, 20. கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலிக்கின்றனர். மெடிக்கல் ஷாப்பில் லட்சுமி வேலை செய்து வருகிறார்.
சில நாட்களாக, மகேஷ் எப்போது போன் செய்தாலும், லட்சுமியின் மொபைல் நம்பர் 'பிசி' என்று வந்தது. இதனால் வேறு ஒருவருடன், லட்சுமி பழகுவதாக, மகேஷ் சந்தேகம் அடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், லட்சுமி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அவரை வழிமறித்த மகேஷ், “என்னை தவிர்த்துவிட்டு, வேறு ஒருவருடன் பழகுகிறாயா?” என்று கேட்டு தகராறு செய்தார். திடீரென மறைத்து வைத்திருந்த, கத்தியை எடுத்து லட்சுமியை குத்திவிட்டுத் தப்பினார். உயிருக்கு போராடியவரை அப்பகுதி மக்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தலைமறைவாக இருந்த மகேஷை நேற்று மதியம், ஷிகாவி போலீசார் கைது செய்தனர்.