ஐகோர்ட் நீதிபதி மீதான புகாரை லோக்பால் விசாரிக்க முடியுமா?
ஐகோர்ட் நீதிபதி மீதான புகாரை லோக்பால் விசாரிக்க முடியுமா?
ADDED : மார் 19, 2025 06:57 AM

புதுடில்லி : உயர் நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் புகாரை லோக்பால் அதிகாரிகள் விசாரிக்கலாம் என்ற உத்தரவின் செல்லுபடியாகும் தன்மை குறித்து விசாரிக்கும் விவகாரத்தில், நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமாரை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
தனிநபருக்கும், தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான வழக்கில், அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக, உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் கூடுதல் நீதிபதி மீது, லோக்பால் அமைப்பில் ஊழல் புகார் அளிக்கப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான லோக்பால் அமர்வு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது சுமத்தப்படும் ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளதாக ஜன., 27ல் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், லோக்பால் உத்தரவுக்கு பிப்., 20ல் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த உத்தரவு மிகுந்த கவலை அளிப்பதாகவும் தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கும், நீதிபதிகள் மீது புகார் அளித்தவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், புகார் கூறப்பட்டுள்ள நீதிபதிகளின் பெயர் விபரங்களை வெளியிடவும் தடை விதித்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அபய் எஸ்.ஒகா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார்தாரர் சார்பில் நீதிமன்றத்துக்கு உதவ, மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமாரை நீதிபதிகள் நியமித்தனர்.
இந்த வழக்கில், லோக்பால் அமைப்பின் அதிகார வரம்பு குறித்து மட்டுமே நீதிமன்றம் ஆராயும், மாறாக குற்றச்சாட்டின் தகுதி குறித்து நீதிமன்றம் ஆராயாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.