ADDED : ஜன 26, 2024 06:57 AM

விஜயபுரா; திருமணம் செய்வதாக கூறி, இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய, கான்ஸ்டபிள் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
விஜயபுரா, பசவனபாகேவாடியை சேர்ந்தவர் விநாயக் தக்கலகி, 30. விஜயபுரா காந்தி சவுக் போலீஸ் நிலையத்தில், கான்ஸ்டபிளாக வேலை செய்தார். எட்டு மாதங்களுக்கு முன்பு விநாயக்கிற்கும், 26 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகி உள்ளனர். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக, ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன், விநாயக் அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன்னை திருமணம் செய்யும்படி, இளம்பெண் கேட்டு உள்ளார். அதற்கு விநாயக் மறுத்து விட்டார்.
இதையடுத்து விநாயக் மீது, விஜயபுரா மகளிர் போலீஸ் நிலையத்தில், இளம்பெண் நேற்று புகார் செய்தார். அதன்படி, அவர் மீது, வழக்கு பதிவாகி உள்ளது. கடந்த 20 நாட்களாக அவர் பணிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்து உள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடுகின்றனர்.

