பஹல்காமில் குவியும் சுற்றுலா பயணியர்; படங்கள் வெளியிட்டார் முதல்வர் ஒமர்
பஹல்காமில் குவியும் சுற்றுலா பயணியர்; படங்கள் வெளியிட்டார் முதல்வர் ஒமர்
ADDED : ஜூன் 24, 2025 02:02 AM

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் களையிழந்து காணப்பட்ட ஜம்மு - காஷ்மீரில், மீண்டும் இயல்புநிலை திரும்பி சுற்றுலா பயணியர் வரத் துவங்கியுள்ளதாக முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சி- ஆட்சி நடக்கிறது.
இங்கு, 'மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில், ஏப்., 22ல் பயங்கரவாத தாக்குதல் நடந்தது.
இதில், 26 சுற்றுலா பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்குப் பின், காஷ்மீர் செல்ல வேண்டாம் என, பல்வேறு நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தன.
இந்திய சுற்றுலா பயணியரும் காஷ்மீர் செல்ல தயக்கம் காட்டினர். இதனால், ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா வருவாய் சரிந்தது. அங்குள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்திருந்த 12 லட்சம் பேர் அதை ரத்து செய்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் வருவாயில், சுற்றுலாத் துறையின் பங்களிப்பு மட்டும், 78 சதவீதம். இதனால், யூனியன் பிரதேசத்தின் வருவாயில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இரண்டு மாதங்களுக்குப் பின் தற்போது பதற்றம் தணிந்துள்ளதால், சுற்றுலா பயணியர் வருகை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஒமர் அப்துல்லா, நெரிசல் மிகுந்த சாலைகள் மற்றும் சுற்றுலாப் பயணியர் கூட்டத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், 'பஹல்காமில் இதுபோன்ற பரபரப்பான காட்சிகளை காண முடிகிறது. நான் கடைசியாக பஹல்காமில் இருந்தபோது, வெறிச்சோடிய மார்க்கெட் வழியாக சைக்கிள் ஓட்டிச் சென்றேன்.
'அந்தப் பகுதிகளில் தற்போது சுற்றுலா பயணியர் நடமாட்டத்தை காண்பதில் மகிழ்ச்சி. அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கத் துவங்கி இருப்பது திருப்தி அளிக்கிறது' எனக் குறிப்பிட்டு உள்ளார்.