
முதன் முறை காமெடி படம்
நடிகை சிரி ரவிகுமார், சகுடும்ப சமேதா, ஸ்வாதி முத்தின மளேஹனியே படத்துக்கு பின், 'பேச்சுலர் பார்ட்டி' என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாடகத்தில் இருந்து, திரையுலகில் நுழைந்தவர். இப்போது முதன் முறையாக, நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கிறார்.
இதில் யோகி, திகந்த், அச்யுத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பேச்சுலர் பார்ட்டியால் வீட்டில் நடக்கும் பிரச்னைகளை, நகைச்சுவை கலந்து கூறியுள்ளனர். குடும்ப சென்டிமென்ட்டும் படத்தில் உள்ளதாம். முதன் முறையாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், படம் திரைக்கு வருவதை, சிரி ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்.
கன்னடத்தில் பாலிவுட் நடிகர்கள்
இயக்குனரும், நடிகருமான பிரேம், தன் படங்களின் டைட்டில், இசை, கலைஞர்கள் தேர்வு செய்வதில் பிரசித்தி பெற்றவர். தற்போது நடிகர் துருவா சர்ஜா நாயகனாக நடிக்கும், கேடி, தி டெவில் படத்தை இயக்குகிறார். இதில் பாலிவுட்டின் சஞ்சய்தத், ஷில்பா ஷெட்டி முக்கியமான கதாபாத்திரங்களிலும், ரீஷ்மா நாணய்யா நாயகியாக நடிக்கின்றனர்.
இதற்கிடையில் படத்தில் துருவா சர்ஜாவுடன் கிளாமர் பாடலுக்கு, பாலிவுட்டின் நோரா பதேஹியை அழைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாலிவுட்டின் பல படங்களில் ஆட்டம் போட்டவர். ஹிந்தி, தெலுங்கில் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்தவர். பெங்களூரு, மைசூரு உட்பட, பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு இறுதி கட்டடத்துக்கு வந்துள்ளது.
மார்ச் 17ல் ரங்க நாயகா!
கடந்த 15 ஆண்டுக்கு பின், நடிகர் ஜக்கேஷ், குருபிரசாத் சேர்ந்து, ரசிகர்களை சிரிக்க வைக்க வருகின்றனர். எத்தேளு மஞ்சுநாதா என்ற படத்தில், இவர்கள் இருவரும் ரசிகர்களை சிரிக்க வைத்தனர். தற்போது ரங்கநாயகா படத்தில் மீண்டும் ரசிகர்கள் வயிற்றை புண்ணாக்க வந்துள்ளனர். 2019லேயே இந்த படம் அறிவிக்கப்பட்டது. கொரொனா தொற்று காரணமாக, படம் தாமதமானது. கதை ஜக்கேஷுக்காகவே தயாரானது. மார்ச் 17ல் ஜக்கேஷின் பிறந்த நாள். அன்றைய தினம், ரங்க நாயகா திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
சினிமா பற்றிய கதை
பத்திரிகை துறையில் முதுகலை பட்டம் பெற்ற இளைஞர்கள், சினிமா வாய்ப்பு தேடும், தாங்களே படம் தயாரிப்பில் ஈடுபட்டு, பல பிரச்னைகள், கஷ்டங்களை அனுபவிப்பதை மத்தே மத்தே படத்தில் காண்பித்துள்ளனர். அருண் ஹொசகொப்பா இயக்கும் இந்த படத்தின் கதை, நகைச்சுவையுடன் நகர்கிறது. இளைஞர் படையுடன், மூத்த நடிகர் உமேஷ், முக்கிய மந்திரி சந்துரு, மந்தீப் ராய் உட்பட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதியதுடன் இயக்கும் பொறுப்பையும், அருண் ஏற்றுள்ளார்.
நடன வடிவில் கவிதை
சந்திரமுகி பிராண சகி, நீ முடித மல்லிகே, பாகீரதி உட்பட, பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை பாவனா ராமண்ணா. 2016ல் நிருத்தரா என்ற படத்தை தயாரித்திருந்தார். சிறந்த நடன கலைஞரான இவர், தற்போது பிரபல கவிஞர் சுப்பராயர் எழுதிய, ஹம்ச கீதே என்ற கவிதையை நடன வடிவத்தில் கொண்டு வர தயாராகிறார்.
கடந்த 1975ல் ஜி.வி.அய்யர், ஹம்சகீதே கவிதை அடிப்படையில் திரைப்படம் இயக்கினார். பாவனா திரையுலகில் நுழைய காரணமாக இருந்தவர் சுப்பராயர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இவரது கவிதைக்கு நடன வடிவம் கொடுக்க பாவனா முடிவு செய்துள்ளார். ஜன., 30ல், பெங்களூரின், சவுடய்யா மெமொரியல் ஹாலில் நிகழ்ச்சி நடக்கிறது.
ரசிகர்களுடன் பிறந்த நாள்!
கன்னட திரையுலகில், எந்த பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியால் திரையுலகில் நுழைந்தவர் நடிகர் துனியா விஜய். வில்லன், பைட்டர், துணை கதாபாத்திரங்களில் நடித்து, ஹீரோவாக வாய்ப்பு பெற்றார். சலகா படத்தை தயாரித்து, இயக்கிய இவர், தற்போது பீமா பட வேலைகளில் இறங்கியுள்ளார். படத்தின் டீசர் தயாராகிறது. இவருக்கு தன் தாய், தந்தை மீது அலாதி பற்றுள்ளது. இவர்களுக்கு தன் சொந்த ஊரில் கோவில் கட்டியுள்ளார். ஜனவரி 20ல் தன் பிறந்த நாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

