!வாரிய பதவிகளை எதிர்பார்க்கும் காங்., புள்ளிகள் கலக்கம்: லோக்சபா தேர்தல் அறிவிப்பதற்குள் கிடைக்குமா?
!வாரிய பதவிகளை எதிர்பார்க்கும் காங்., புள்ளிகள் கலக்கம்: லோக்சபா தேர்தல் அறிவிப்பதற்குள் கிடைக்குமா?
ADDED : பிப் 05, 2024 11:14 PM
பெங்களூரு: கார்ப்பரேஷன், வாரிய தலைவர் பதவிகளுக்கு காங்., பிரமுகர்களை நியமித்துள்ள காங்கிரஸ் அரசு, நியமன பட்டியலை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்குள் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டால், பதவி கிடைக்குமா என காங்., புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. அமைச்சர் பதவி கிடைக்காமல், பல எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் இருந்தனர். பகிரங்கமாகவே கோபத்தை வெளிப்படுத்தினர்.
இவர்களை சமாதானம் செய்யும் நோக்கில், கார்ப்பரேஷன், வாரிய தலைவர்களாக நியமிக்க முடிவு செய்தது. அதையும் உடனடியாக செய்யவில்லை. பதவிக்காக பலரும் காத்திருந்தனர்.
சமாதானம்
கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக இழுத்தடித்தது. லோக்சபா தேர்தல் நெருங்குவதால், காங்கிரஸ் தலைவர்கள், பெங்களூருக்கும், டில்லிக்கும் அலையாய் அலைந்து, நியமன பட்டியலுக்கு ஒப்புதல் பெற்றனர்.
34 எம்.எல்.ஏ.,க்களை, கார்ப்பரேஷன், வாரிய தலைவர்களாக நியமித்து, 2024 ஜனவரி 26ல் அரசு, அவசர, அவசரமாக உத்தரவு பிறப்பித்தது.
பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர வளர்ச்சி வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட ஹாரிஸ் உட்பட சிலர் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் பலர், தங்களுக்கு அமைச்சர் பதவியே வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கின்றனர். இவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில், தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களை தொடர்ந்து, கட்சியின் முக்கிய பிரமுகர்களை கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு நியமிக்க அரசு முடிவு செய்தது. நியமன பட்டியலும் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் வெளியிடவில்லை.
பத்து நாட்களாக, பல சுற்று கூட்டங்கள் நடந்துள்ளன. அதன்பின் இந்த விஷயத்தை, அரசு கிடப்பில் போட்டு விட்டது.
முதல்வர் சித்தராமையா, மாநில காங்., தலைவர் சிவகுமார், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட அனைத்து தலைவர்களும், ராஜ்யசபா, லோக்சபா தேர்தலுக்கு தயாராவதில் மும்முரமாக உள்ளனர். கார்ப்பரேஷன், வாரிய நியமன பட்டியலை கண்டுகொள்ளவில்லை. இதனால், இந்த பதவியை எதிர்பார்த்து இருந்தவர்கள் கடுப்பில் உள்ளனர்.
பதற்றம்
விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்பின் சட்டசபை கூட்டம் நடக்கும். மார்ச் மாதம் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும். தேர்தல் அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.
லோக்சபா தேர்தல் முடிந்து, முடிவு வெளியாகும் வரை, கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு தலைவர்களை நியமிக்க கூடாது. அதுவரை முக்கிய புள்ளிகள், தங்களுக்கு தலைவர் பதவி கிடைக்குமா, கிடைக்காதா என்ற பதற்றத்துடன் காத்திருக்க வேண்டும்.
கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு நியமித்த போது, முதற்கட்டமாக எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே, பதவி வழங்க வேண்டும். லோக்சபா தேர்தல் முடிந்த பின், மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என முதல்வரும், துணை முதல்வரும் முடிவு செய்திருந்தனர்.
எனவே கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் பட்டியலை மட்டும், காங்., மேலிடத்துக்கு அனுப்பினர்.
பட்டியல்
ஆனால், கட்சியின் இதர தலைவர்களுக்கும், கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர், துணை தலைவர் பதவிகளை பகிர்ந்தளிக்கும்படி, காங்., மேலிடம் ஆலோசனை கூறியது. எனவே எம்.எல்.ஏ.,க்களை தொடர்ந்து, முக்கிய புள்ளிகள் பட்டியலை அனுப்பி, அனுமதியும் பெறப்பட்டது.
எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலை வெளியிட்டது. ஆனால், இதர பிரமுகர்கள் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை.
தங்களின் சேவையை அடையாளம் கண்டு, கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர் பதவி வழங்க முடிவு செய்ததால், பிரமுகர்கள் குஷியில் இருந்தனர். ஆனால், இன்னும் பட்டியல் அறிவிக்கப்படாததால், எம்.எல்.ஏ.,க்களுக்கு உள்ள முக்கியத்துவம், எங்களுக்கு இல்லையா' என, கேள்வி எழுப்புகின்றனர்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன், பட்டியலை வெளியிடும்படி வலியுறுத்தி உள்ளனர். இதனால், லோக்சபா தேர்தலுக்கு தயாராவதில், ஆர்வம் காண்பிக்காமல் ஒதுங்கி உள்ளனர்.