அண்ணனை எதிர்த்து களம் இறங்கும் தங்கை ஆந்திராவில் காங்கிரஸ் வியூகம்
அண்ணனை எதிர்த்து களம் இறங்கும் தங்கை ஆந்திராவில் காங்கிரஸ் வியூகம்
ADDED : ஜன 17, 2024 01:04 AM

புதுடில்லி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், சமீபத்தில் காங்கிரசில் இணைந்தவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், காங். மூத்த தலைவருமான, மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வந்தார்.
ஆதரவு
இவர் தன் கட்சியை காங்கிரசில் இணைக்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டு வந்தது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு தன் ஆதரவை ஷர்மிளா வழங்கினார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி புதுடில்லி சென்ற அவர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சி எம்.பி., ராகுல் ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அப்போது, தன் கட்சியையும், காங்கிரசுடன் இணைப்பதாக அறிவித்தார். அதன்பின், சோனியாவையும் சந்தித்து ஆசி பெற்றார்.
ராஜினாமா
இதற்கிடையே, லோக்சபா உடன் இணைத்து ஆந்திர மாநிலத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா மாநிலத்தை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி அடுத்ததாக, ஆந்திராவிலும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது.
இச்சூழலில், அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ருத்ர ராஜு தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆந்திர காங்கிரஸ் தலைவராக ஷர்மிளாவை, கட்சித் தலைமை நேற்று அதிகாரப்பூர்வமாக நியமித்தது.

