காங்., கட்சி ஆபத்தில் உள்ளது பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் கோபம்
காங்., கட்சி ஆபத்தில் உள்ளது பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் கோபம்
ADDED : பிப் 29, 2024 11:19 PM

சாம்ராஜ்நகர்: “அரசியலமைப்பு ஆபத்தில் இல்லை. காங்கிரஸ் கட்சி தான் ஆபத்தில் உள்ளது,” என, பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் கிண்டலாக கூறி உள்ளார்.
சாம்ராஜ்நகர் பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் நேற்று அளித்த பேட்டி:
அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா, சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா மாநாடு நடத்தினர். அரசியலமைப்பு ஆபத்தில் இருப்பதாக கூறினர். அரசியலமைப்பு வலுவாக உள்ளது; எந்த ஆபத்தும் இல்லை.
ஆனால், காங்கிரஸ் கட்சி தான், ஆபத்தில் உள்ளது. அரசியல் சாசனம் பெயரில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக அனைத்தும் சித்தரிக்கின்றனர்.
லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும். நான் 25 ஆண்டுகள் காங்கிரசில் இருந்தேன். காங்கிரஸுக்கு இப்படி ஒரு மோசமான நிலை வரும் என்று, ஒரு நாளும் நினைத்து கூட பார்த்தது இல்லை.
அவசர நிலைக்கு பின்னர், காங்கிரஸுக்கு மாற்றாக, ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த கட்சியால் வளர முடியவில்லை.
தற்போது காங்கிரஸுக்கு மாற்றாக, பா.ஜ., பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. 1974 முதல் இதுவரை 17 தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளேன்.
வெற்றி, தோல்வியை சந்தித்து உள்ளேன். அடுத்த தேர்தலில், நிச்சயம் போட்டியிட மாட்டேன். மக்களுக்கு வெளிப்படையான, நிர்வாகம் கொடுத்து உள்ளேன். இதனால் திருப்தி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

