ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவில் சர்ச்சை: புனே சட்டக்கல்லூரி மாணவி கைது
ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவில் சர்ச்சை: புனே சட்டக்கல்லூரி மாணவி கைது
UPDATED : மே 31, 2025 09:34 PM
ADDED : மே 31, 2025 09:29 PM

புனே: ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவுக்கு பதிலளிக்கும் போது அவமதிப்பு கருத்துகளை தெரிவித்ததாக புனேயைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியை, கோல்கட்டா போலீசார் கைது செய்தனர்.
புனேயை சேர்ந்தவர் ஷர்மிஸ்தா பனோலி. சட்டக்கல்லூரி மாணவி. இவர் ஆபரேஷன் சிந்தூர் குறித்த பதிவுக்கு பதிலளிக்கும் போது, பாலிவுட் நடிகர்கள் தொடர்பாக கருத்து தெரிவித்ததாகவும், குறிப்பிட்ட மதம் தொடர்பாக இழிவான கருத்துகளை தெரிவித்ததாகவும் கோல்கட்டா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது கோல்கட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த பதிவு சர்ச்சை ஆனதைத் தொடர்ந்து, அவர் அதனை நீக்கிவிட்டார். அதற்காக மன்னிப்பு கேட்டும் அறிக்கை வெளியிட்டார்.
வழக்குப்பதிவானதை தொடர்ந்து, ஷர்மிஸ்தா பனோலி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகினர். போலீசார் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. தொடர்ந்து ஹரியானா மாநிலம் குருகிராமில் வைத்து கோல்கட்டா போலீசார் கைது செய்தனர். அவரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.