மாயமான வாலிபர் பிணமாக மீட்பு
பெங்களூரு ஒசகெரேஹள்ளியில் வசித்தவர் லோகேஷ், 35. கடந்த மாதம் 31 ம் தேதியில் இருந்து திடீரென மாயமானார். அவரை காணவில்லை என்று கிரிநகர் போலீசில், குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்நிலையில் ராம்நகர் சென்னப்பட்டணா சிங்கராஜபுரா கிராமத்தில் உள்ள, கவிரங்க சுவாமி மலை அடிவாரத்தில், நேற்று முன்தினம் லோகேஷ் பிணமாக மீட்கப்பட்டார். மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
கிராமத்தில் தொடர் திருட்டு
துமகூரு அருகே திம்மசந்திரா கிராமத்தில் வசிப்பவர் ரங்கராஜ்; விவசாயி. இவரது வீட்டிற்குள் கடந்த 8ம் தேதி புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்து 1.25 லட்சம் மதிப்பிலான நகைகள், 20 ஆயிரம் ரூபாய், ரொக்கத்தை திருடினர். நேற்று முன்தினமும் கெஞ்சகவுடா என்பவர் வீட்டிலும் 40 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது. தொடர் திருட்டுகளால், கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
விபத்தில் டாக்டர் பலி
பெலகாவி கே.எல்.இ., சதுக்கத்தில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, ஒரு கார் சென்றது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்ற லாரியின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் பாகல்கோட் ஜமகண்டியை சேர்ந்த, டாக்டர் சவுரப், 25 என்பவர் இறந்தார். அவரது நண்பர் சேத்தன், 25, தோழி கிரிஷா, 25 படுகாயம் அடைந்தனர்.
பைக் மோதி எரிந்த பஸ்
விஜயபுரா சிந்தகி கபசவலகி கிராம பகுதியில், நேற்று மதியம் கர்நாடகா அரசு பஸ் சென்றது. எதிரே வேகமாக வந்த பைக், பஸ்சின் முன்பகுதியில் மோதியது.
இதனால் பைக் பெட்ரோல் டேங்க் வெடித்து பஸ்சில் தீப்பிடித்தது. அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர், பயணியர், பஸ்சில் இருந்து இறங்கி உயிர் தப்பினர். பைக்கில் வந்த நபர் தீயில் கருகி இறந்தார்.
அவர் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. தீப்பிடித்ததில் பஸ்சும் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

