லோக்சபா தேர்தலில் வாரிசுகளுக்கு 'சீட்' கேட்டு நெருக்கடி!: மாநில தலைவர்கள் மீது காங்., மேலிடம் அதிருப்தி
லோக்சபா தேர்தலில் வாரிசுகளுக்கு 'சீட்' கேட்டு நெருக்கடி!: மாநில தலைவர்கள் மீது காங்., மேலிடம் அதிருப்தி
ADDED : ஜன 26, 2024 07:04 AM

பெங்களூரு; கர்நாடக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஜெயசந்திரா, கலால் துறை அமைச்சர் திம்மாபூர் உள்ளிட்ட மாநில காங்., தலைவர்கள் பலரும், லோக்சபா தேர்தலில் தங்கள் வாரிசுகளுக்கு, 'சீட்' கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால், காங்கிரஸ் மேலிடம் அதிருப்தியில் உள்ளது.
கர்நாடக காங்கிரஸ், லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டில்லியில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். மற்றொரு பக்கம், மாநில காங்., தலைவரான துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், தலைவர்களுடன் தேர்தலுக்கு தயாராகிறார்.
இதற்கிடையில், சில அமைச்சர்கள் தங்களின் வாரிசுகளுக்கு, சீட் பெற திரைமறைவில் முயற்சிக்கின்றனர். கர்நாடக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஜெயசந்திரா, துமகூரு லோக்சபா தொகுதியில், தன் மகன் சஞ்சய்க்கு சீட் பெற முயற்சிக்கிறார். கலால் துறை அமைச்சர் திம்மாபூர், சித்ரதுர்கா மீது கண் வைத்துள்ளார். இங்கு தன் மகன் வினய்க்கு சீட் கேட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வினய் திம்மாபூர், சித்ரதுர்கா மாவட்ட காங்கிரஸ் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, கட்சியை பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார். தொகுதியில் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.
சித்ரதுர்கா தனி தொகுதியாகும். மாவட்டத்தை சாராதவர்களுக்கு முக்கியத்துவம் தருவது, இந்த தொகுதியின் சிறப்பாகும். சித்ரதுர்கா பா.ஜ., - எம்.பி., நாராயணசாமி, ஆனேக்கல்லை சேர்ந்தவர். இதற்கு முன் இத்தொகுதி எம்.பி.,யாக இருந்த சந்திரப்பா, சிக்கமகளூரை சேர்ந்தவர்.
தற்போது துமகூரை சேர்ந்த வினய் திம்மாபூர், போட்டியிட விரும்புகிறார். காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு தொகுதியை சுற்றி வருகிறார்.
அமைச்சர் பதவி கிடைக்காமல், வருத்தத்தில் உள்ள ஜெயசந்திரா, துமகூரு லோக்சபா தொகுதியில் தன் மகனுக்கு சீட் கேட்டு பிடிவாதம் பிடிக்கிறார். இதனால் இதே தொகுதியில் சீட் எதிர்பார்க்கும் மற்ற தலைவர்கள் எரிச்சலடைந்துள்ளனர்.
பெங்களூரின், சாந்திநகர் எம்.எல்.ஏ., ஹாரிஸ், பெங்களூரு மத்திய தொகுதியில் தன் மகன் முகமது நல்பாடுக்கு, சீட் எதிர்பார்க்கிறார். மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், பெலகாவி தொகுதியில் தன் மகனை களமிறக்க, திரை மறைவில் முயற்சிப்பதாக தகவல் வெளியானது. இவரது செயல் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு கோபத்தை அளித்துள்ளது.
மைசூரு லோக்சபா தொகுதியில், முதல்வர் சித்தராமையாவின் மகன் எதீந்திராவை களமிறக்க, முதல்வரின் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். இதற்காக காங்., மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். பா.ஜ.,வின் பிரதாப் சிம்ஹாவே, இம்முறையும் வேட்பாளராக வாய்ப்புள்ளது. இவரை எதிர்க்கொள்ள எதீந்திராவே பொருத்தமானவர் என, காங்., மேலிடத்தின் காதில் ஓதுகின்றனர்.
சமூக நலத்துறை அமைச்சர் மகாதேவப்பா, தன் மகன் சுனில் போசுக்கு, சாம்ராஜ்நகர் அல்லது மைசூரு லோக்சபா தொகுதியில் சீட் எதிர்பார்க்கிறார். இதேபோன்று, பல அமைச்சர்கள், தங்கள் மகன் அல்லது மகன்களுக்கு சீட் பிடிப்பதில், ஆர்வம் காண்பிக்கின்றனர்.
இம்முறை லோக்சபா தேர்தலில், குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் மேலிடம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள் என, தலைவர்கள், அமைச்சர்களுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இவர்கள் தேர்தலுக்கு தயாராவதில், அக்கறை காண்பிக்காமல், தங்கள் வாரிசுகளுக்கு சீட் பிடிப்பதில் ஆர்வம் காண்பிப்பதால், மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது.
லோக்சபா தேர்தலில், எட்டு முதல் ஒன்பது அமைச்சர்களை களமிறக்க, காங்கிரஸ் மேலிடம் ஆலோசிக்கிறது. ஆனால், சிலருக்கு அமைச்சர் பதவியை விட்டுத்தருவதில் விருப்பம் இல்லை. எனவே தங்களுக்கு பதிலாக, மகன் அல்லது மகளுக்கு சீட் பெற முயற்சிக்கின்றனர்.
சிலர் லோக்சபா தேர்தலில் போட்டியிட தலையாட்டினாலும், தாங்கள் வெற்றி பெற்றால், காலியாகும் சட்டசபை தொகுதிகளில், தங்கள் குடும்பத்தினருக்கே சீட் கொடுக்க வேண்டும் என, நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தலைவர்களின் ஒருமித்த கருத்துடன், லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பது, காங்கிரஸ் மேலிடத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கும்.

