ஓட்டுக்களை அல்ல; மக்களின் இதயங்களை திருடுபவர் மோடி பிரதமருக்கு டில்லி முதல்வர் புகழாரம்
ஓட்டுக்களை அல்ல; மக்களின் இதயங்களை திருடுபவர் மோடி பிரதமருக்கு டில்லி முதல்வர் புகழாரம்
ADDED : செப் 17, 2025 02:22 AM

புதுடில்லி:“பிரதமர் நரேந்திர மோடி, ஓட்டுக்களை திருடுபவர் அல்ல; மக்களின் இதயங்களைத் திருடுபவர்,” என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
டில்லி தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த விஸ்வகர்மா பூஜையில், தொழிலாளர்கள் மத்தியில் முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தன் செயல்பாடுகளின் வாயிலாக நம் நாட்டில் புதிய ஆற்றலை விதைத்துள்ளார். அதனால்தான் நம் நாடு வேகமாக முன்னேறுகிறது. ஏழைகள் பயனடைந்து வருகின்றனர்.
அதனால்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் கூட, நம் நாட்டுக்கு வணக்கம் செலுத்துகின்றன. ஆனால், எதிர்க்கட்சிகளால் தான் பிரதமர் நரேந்திர மோடி அவமானத்தை எதிர்கொள்கிறார்.
எதிர்க்கட்சிகள் அழுக்கு அரசியல் நடத்தி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி ஓட்டுக்களை திருடுவதாக குற்றம் சாட்டுகின்றன. ஆனால், உண்மையிலேயே மக்களின் இதயங்களைத்தான் பிரதமர் மோடி திருடுகிறார்.
குழந்தைப் பருவத்தில், வெண்ணெய் மீது கொண்ட பிரியத்துக்காக பகவான் கிருஷ்ணர், 'மகான் சோர்' என அன்புடன் அழைக்கப்பட்டார். அதுபோலத்தான் மோடியும், 'மன் கா சோர்' என அழைக்கப்பட வேண்டும்.
ஓட்டுக்களை திருட வேண்டிய அவசியம் மோடிக்கு இல்லை. அதிகாரத்தை இழந்த கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள பயப்படுகின்றன. அதனால்தான் அவதுாறுகளைப் பரப்பி வருகின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரன ராகுல், தன் மைத்துனருக்கு நிலத்தையும், சகோதரிக்கு பதவியையும் கொடுத்தார். தன் தாயை பிரதமர் வேட்பாளராக் கினார்.
ஆனால், பா.ஜ., ஆட்சியில் பிரதமர் மோடி தன் வாழ்க்கையை நாட்டுக்கு அர்ப்பணித்து துறவி போல வாழ்கிறார். மோடி குடும்பத்தில் யாருக்கும் எந்தச் சலுகையும் அளிக்கவில்லை.
குழந்தை பராமரிப்பு மையம் நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தொழிலாளர்களின் கடின உழைப்பு இல்லாமல் எந்த மாநிலமும் வளர்ச்சி அடைய முடியாது.
டில்லியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகுதான், ஏழைகளுக்கு பயனளிக்கும் 'ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்' மற்றும் 'ஆரோக்கிய மந்திர்' திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன.
டில்லி மாநகரம் தொழிலாளர்களுக்கு சொந்தமானது. பா.ஜ., அரசு எப்போதும் தொழிலாளர்களுக்கு துணையாக இருக்கும். டில்லி மாநகரில் பெண் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக விட்டுச்செல்ல, மாநகர் முழுதும் 500 இடங்களில், 'பால்னா' என்ற குழந்தை பராமரிப்பு காப்பகங்கள், பிரதமர் மோடி பிறந்த நாளான இன்று துவக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிறந்த நாள் பாடல்
பிரதமர் நரேந்திர மோடியின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, 'நமோ பிரகதி டில்லி.. பால் ஸ்வர் சே ராஷ்ட்ர ஸ்வர் தக்' என்ற 21 மொழிகளில் மாணவர்கள் பாடும் பாடலை டில்லி அரசின் கல்வித் துறை தயாரித்துள்ளது. இந்தப் பாடலை தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்ட முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:
டில்லியின் உயிர்நாடியைப் போல பல ஆண்டுகளாக பிரதமர் மோடி உழைத்து வருகிறார். ஆனாலும், முந்தைய அரசுகள் மோடியை விமர்சித்தன. எதிர்க்கட்சியினர் தகாத வார்த்தைகளிலும் மோடிய இழிவுபடுத்துகின்றனர். ஆனால், இன்றைய டில்லி அரசு இந்தப் பாடலை வெளியிட்டு மோடிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. பள்ளி மாணவ - மாணவியர் பிரதமர் கோடிக்கு கொடுத்துள்ள பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள், பிரதமரி கரங்களில் இன்று ஒப்படைக்கப்படும். மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று காலை 7:00 மணிக்கு கர்தவ்ய பாதையில் சிறப்பு நடைப்பயணம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்களுக்கான புற்றுநோய் மையம்
டில்லி டிபன்ஸ் காலனியில், 'அப்போலோ அதீனா' என்ற பெண்களுக்கான பிரத்யேக புற்றுநோய் மையத்தை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்து பேசியதாவது:
நாடு முழுதும் உள்ள மக்களுக்கும் மேம்பட்ட மருத்துவ சேவையை வழங்கும் மாநகரமாக டில்லியை மாற்றுவதே பா.ஜ., அரசின் நோக்கம். அரசின் இந்த திட்டத்துக்கு தனியாரும் முன் வந்து பங்களிக்க வேண்டும். அப்போலோவின் இந்த பிரத்யேக மையம், பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மலிவான கட்டணத்தில் மருத்துவ சேவையை வழங்கும்.
புற்றுநோய் உள்ளிட்ட கடும் நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னொரு காலத்தில் சமூகத்தில் அவமானத்தைச் சந்தித்தனர். அதை வெளியில் சொல்லாமல் சிகிச்சை பெற தயங்கினர்.
பலருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் துரதிர்ஷ்டவசமாக உயிர் இழந்தனர். ஆனால், படிப்படியாக விழிப்புணர்வு அதிகரித்தது பெண்கள் மருத்துவமனைகளுக்குச் செல்லத் துவங்கினர். அப்போலோ போன்ற நிறுவனங்கள் இப்போது சிகிச்சையை மட்டுமல்ல, தனிப்பட்ட பராமரிப்பையும் வழங்குவது வரவேற்புக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆரோக்ய மந்திர் இன்று திறப்பு
டில்லி மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:
மாநகர் முழுதும் உள்ள 300 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களாக மாற்றப்படும். அதில், 41 மந்திர்கள், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளான இன்று திறக்கப்படும். மேலும் 19 மந்திர்கள் வரும் 30ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அனைத்து செலவுகளையும் டில்லி அரசு முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், பல ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை மருத்துவ மையங்கள், மகப்பேறு மையங்கள், மகப்பேறு இல்லங்கள் மற்றும் பாலி கிளினிக்குகள் புனரமைக்கப்படும். தேசிய தலைநகர் பிராந்தியம் முழுதும் 2026ம் ஆண்டுக்குள் 1,139 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் துவக்க முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.