ADDED : ஜன 27, 2024 12:10 AM

ஹாசன்- “நாட்டில் காங்கிரஸ் படிப்படியாக அழியும். அமைச்சர் பதவி கொடுப்பதாக கூறி, காங்கிரஸ் ஏமாற்றுகிறது என்பதற்கு ஜெகதீஷ் ஷெட்டரே உதாரணம்,” என, ம.ஜ.த.,வின் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.
ஹாசன் மாவட்டம் ஹாலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜெகதீஷ் ஷெட்டர் திறமையான மனிதர்; முன்னாள் முதல்வராக இருந்தவர். அவரை உற்சாகத்துடன் கட்சியில் இணைத்த காங்கிரஸ், அவரை எம்.எல்.சி.,யாக்கி, அமைச்சராக்கவில்லை. ஆசை வார்த்தை கூறி இப்படி செய்யலாமா?
நான் யாரையும் இதுபோன்று துஷ்பிரயோகம் செய்யவில்லை. மாநிலத்தின் முதல்வராக, திறமையான தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர்.
அமைச்சர் பதவி வழங்குவதாக காங்கிரஸ் ஏமாற்றுகிறது என்பதற்கு இந்த உதாரணம் போதும்.
இது காங்கிரசின் பலவீனம். வரும் நாட்களில் காங்கிரஸ் படிப்படியாக அழியும்.
ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜ.,வில் இணைந்தது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

