ADDED : ஜன 17, 2024 12:59 AM
புதுடில்லி,
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்ற அமர்வில் உள்ள இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இதையடுத்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது, மாநில திறன் மேம்பாட்டு வாரியத்தில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் அவர், கடந்தாண்டு கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அவர் வழக்கு தொடர்ந்தார்.
இதை ஏற்க ஆந்திர உயர் நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில், நீதிபதிகள் அனிருத்தா போஸ், பீலா திரிவேதி அடங்கிய அமர்வு நேற்று உத்தரவுகள் பிறப்பித்தது.
குறிப்பாக, ஊழல் தடுப்பு சட்டத்தின், 17ஏ பிரிவின்படி, விசாரணை அல்லது கைது நடவடிக்கைக்கு முன்னதாக, கைது செய்வதற்கு முன் அனுமதி பெறுவது தொடர்பாக நீதிபதிகள் விரிவாக குறிப்பிட்டனர். கடந்த, 2018, ஜூலை 26ல் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
அதன்படி, முன்அனுமதி பெறாமல் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்நிலையில், சந்திரபாபு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், 2014 - 2019 காலகட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
'ஊழல் தடுப்பு சட்டத்தின் திருத்தத்தை முன் தேதியிட்டு நடைமுறைபடுத்தலாம்' என, நீதிபதி அனிருத்தா போஸ் தன் உத்தரவில் கூறியிருந்தார். ஆனால், 'முன் தேதியிட்டு நடவடிக்கை எடுக்க முடியாது' என, நீதிபதி பீலா திரிவேதி குறிப்பிட்டார்.
இந்த சட்ட விதி தொடர்பாக இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை பெரிய அமர்வின் விசாரணைக்கு அனுப்புவது தொடர்பாக முடிவெடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

