கர்நாடகா பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரின் பதவி நீக்கம் ரத்து
கர்நாடகா பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரின் பதவி நீக்கம் ரத்து
ADDED : மே 26, 2025 07:30 AM

பெங்களூரு: கர்நாடகா பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரின் பதவி நீக்கம் ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா சட்டசபையில் சபாநாயகரை அவமதித்தது மற்றும் விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, பா.ஜ.,வைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.,க்களை 6 மாதங்களுக்கு பதவிநீக்கம் செய்து, கடந்த மார்ச் 21ம் தேதி சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.,க்களின் பதவி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியான பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் அசோகா மற்றும் சட்ட மற்றும் சட்டசபை விவகாரங்களுக்கான அமைச்சர் எச்.கே.பாட்டீலுடன் சபாநாயகர் காதர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரின் பதவி நீக்கத்தை ரத்து செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டார். பதவி நீக்கம் செய்து 2 மாதங்களுக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சபாநாயகர் காதர் கூறுகையில், 'எம்.எல்.ஏ.,க்கள் பதவி நீக்கம் தொடர்பாக அவையில் முன்மொழிந்தேன். அவை உறுப்பினர்கள் அதனை நிறைவேற்றினர். இது குறித்து முதல்வர், துணை முதல்வர், சட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அதில், பதவி நீக்கத்தை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. எம்.எல்.ஏ.,க்கள் எங்களின் நண்பர்களே தவிர, எதிரிகள் கிடையாது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது. அப்படி நிகழ்ந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.