ADDED : பிப் 05, 2024 11:11 PM

மைசூரு: ''பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சியாலும், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிலும், கட்சிக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது. இருப்பினும், லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் சவால்கள் உள்ளன. தொண்டர்கள் மனம் தளரக்கூடாது,'' என மாநில பா.ஜ., பொது செயலர் ராஜேஷ் தெரிவித்தார்.
மைசூரு மாவட்ட பா.ஜ., சார்பில் நேற்று நடந்த நகர மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தை, மாநில பொதுச் செயலர் ராஜேஷ் துவக்கி வைத்தார்.
இதில் அவர் பேசியதாவது:
லோக்சபா தேர்தல் எளிதானது அல்ல. ஏனென்றால், காங்கிரஸ் எல்லாவற்றையும் உள்ளூர் மயமாக்குகிறது. கர்நாடகாவுக்கு அநீதி இழைப்பதாக, முதல்வர் சித்தராமையா தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக விமர்சித்து வருகிறார்.
கடும் உழைப்பு
எனவே, மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசின் தோல்விகளை வாக்காளர்களுக்கு எடுத்துரைக்க, தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவில் அரசியலுக்கு ஒரு புதிய பரிமாணத்தையும், யோசனையையும் பா.ஜ., அளித்து உள்ளது.
கடந்த காலங்களில் அரசியல் செய்ய பண பலமும் வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
இருப்பினும், கடின உழைப்பின் அடிப்படையில் கட்சியை உருவாக்க முடியும் என்பதை பா.ஜ.,வினர் நிரூபித்து உள்ளனர். இது நமது கட்சியில் மட்டுமே சாத்தியம்.
பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சியாலும், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிலும், கட்சிக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது.
இருப்பினும், லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் சவால்கள் உள்ளன. தொண்டர்கள் மனம் தளரக்கூடாது.
சிறப்பான நிர்வாகம்
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஓட்டு கேட்பதில் தொண்டர்கள் வெட்கமோ, சங்கடமோ பட மாட்டார்கள். அத்தகைய நிர்வாகத்தை எங்கள் அரசு வழங்கி வருகிறது.
நாட்டில் 2014க்கு முன் பாதுகாப்பு இல்லை. எங்கும் வெடிகுண்டு வெடித்து விடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் பா.ஜ., அரசு வந்த பின், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கவில்லை. நாட்டை இதுபோன்று நடத்துவது எளிதல்ல.
வளர்ச்சி என்பது பணக்காரர்கள் மற்றும் வசதி படைத்தவர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவது என்பது காங்கிரசின் கருத்து. ஆனால், ஏழைகளின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்பதே எங்களின் கருத்து.
அதனால் தான் எங்கள் திட்டத்தில், 80 சதவீதம் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது. மோடியின் அரசால் உலகளவில் இந்தியாவின் கவுரவம் அதிகரித்து உள்ளது.
முன்னதாக அரசியல் சாசனத்தை அவமதிக்கும் முயற்சி நடந்தது. அதை எங்கள் அரசு தடுத்து நிறுத்தி உள்ளது. கலாசார இந்தியாவை கட்டமைக்கும் பணியை செய்து உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.