'டூர்'னு சொல்லிட்டு வயநாட்டுக்கு யாரும் இப்போ வராதீங்க... எச்சரிக்கிறது கேரளா போலீஸ்!
'டூர்'னு சொல்லிட்டு வயநாட்டுக்கு யாரும் இப்போ வராதீங்க... எச்சரிக்கிறது கேரளா போலீஸ்!
UPDATED : ஆக 03, 2024 01:56 PM
ADDED : ஆக 03, 2024 01:49 PM

வயநாடு; மீட்புப்பணிகளை வேடிக்கை பார்க்க, Dark Tourism என்ற பெயரில் சுற்றுலா பயணிகள் வயநாடு வர கேரள போலீசார் தடை விதித்துள்ளனர்.
மீட்புப்பணிகள்
இந்தாண்டின் கோர நிகழ்வாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ள வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் இன்னமும் பலரின் மனதை விட்டு அகலவில்லை. பலி எண்ணிக்கை 300ஐ கடந்துவிட்ட நிலையில், மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கடும் உத்தரவு
இந் நிலையில் வயநாடு இப்போது எப்படி இருக்கிறது? மக்களின் மனநிலை என்ன? என்று பார்க்க யாரும் சுற்றுலாவாக வரவேண்டாம் என்று கேரள போலீசார் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அட்ராசிட்டி
துக்கம், துயரம், அழுகுரல்கள், வேதனைகள் நிரம்பிய மக்களின் உணர்ச்சிகளை நேரில் பார்க்க விரும்புவதற்கு Dark Tourism என்று பெயர். எங்கு இதுபோன்ற துயரங்கள் நிகழ்ந்தாலும் அங்கே ஒரு கூட்டம் கைகளில் கேமரா சகிதம் களம் இறங்கி விடுகிறது. 'உள்ளது உள்ளபடி, இருப்பதில் இதுதான் உருப்படி' என வசனங்களுடன் வீடியோக்களை உலவவிட்டு அட்ராசிட்டி கிளப்புவதே அவர்களுக்கு வேலை.
சுற்றுலா வேண்டாம்
அப்படி ஒரு நிகழ்வு அரங்கேறி விடக்கூடாது என்ற திடமான எண்ணத்துடன் 'யாரும் வயநாட்டுக்கு Dark Tourism என்று வந்துவிட வேண்டாம்' என்று கடுமையான உத்தரவை கேரள போலீசார் பிறப்பித்து உள்ளனர்.
போலீசார் தடை
இதுகுறித்து போலீசார் தங்களது எக்ஸ் தள வலை பதிவில் கூறி உள்ளதாவது;
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய முறையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் நாங்கள் முழுமையாக ஈடுபட மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனவே சுற்றுலா என்ற பெயரில் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிப் பார்க்க யாரும் இங்கே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.