ம.ஜ.த.,வுக்கு கொடுக்க கூடாது 'சிண்டு முடியும்' பிரீத்தம் கவுடா
ம.ஜ.த.,வுக்கு கொடுக்க கூடாது 'சிண்டு முடியும்' பிரீத்தம் கவுடா
ADDED : பிப் 05, 2024 10:59 PM

மாண்டியா: ''மாண்டியா லோக்சபா தொகுதியை, ம.ஜ.த.,வுக்கு விட்டுத் தரக்கூடாது என, பா.ஜ.,வின் பெரும்பாலான தொண்டர்கள், கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தை மாநில தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்,'' என, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா தெரிவித்தார்.
மாண்டியா, பாண்டவபுராவில் நேற்று அவர் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ம.ஜ.த., இணைந்துள்ளது. ஆனால் சீட் பங்கீடு குறித்து, இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஹாசன், மாண்டியா ஆகிய தொகுதிகள் பா.ஜ.,வுக்கு கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். இரண்டு தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
மாண்டியா தொகுதியை, ம.ஜ.த.,வுக்கு விட்டுத் தரக்கூடாது என, பா.ஜ.,வின் பெரும்பாலான தொண்டர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தை மாநில தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அவருடன் ஆலோசனை நடத்துவதாக, தொண்டர்களுக்கு உறுதி அளித்து உள்ளேன்.
மாண்டியா, ஹாசன் உட்பட, பல தொகுதிகளில் இதற்கு முன்பு ம.ஜ.த.,வுக்கு செல்வாக்கு இருந்தது. ஆனால் சட்டசபைத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே, ம.ஜ.த., வெற்றி பெற்றது.
இந்த தொகுதியில் பா.ஜ.,வும் கூட செல்வாக்கு பெற்றுள்ளது. எனவே லோக்சபா தேர்தலில், எங்கள் கட்சி வேட்பாளரை களமிறக்க வேண்டும் என, தொண்டர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.