தரமற்ற ட்ரோன்களை வழங்கியதாக 'ட்ரோன் பிரதாப்' மீது குற்றச்சாட்டு
தரமற்ற ட்ரோன்களை வழங்கியதாக 'ட்ரோன் பிரதாப்' மீது குற்றச்சாட்டு
ADDED : ஜன 26, 2024 06:58 AM
பெங்களூரு; 'பிக் பாஸ்' போட்டியாளர் ட்ரோன் பிரதாப், தரமில்லாத ட்ரோன் கொடுத்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாண்டியா, மளவள்ளியின், நெட்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப், 35. இவர் ட்ரோன்கள் உருவாக்குவதில் கை தேர்ந்தவர். எனவே இவரை, 'ட்ரோன் பிரதாப்' என்றே அழைக்கின்றனர். கன்னட பிக்பாஸ் ரியாலிடி ஷோவில் பங்கேற்றிருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, பேசிய இவர், 'நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருந்த போது, பெங்களூரு மாநகராட்சி அதிகாரி பிரயாக்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், என்னை மோசமாக நடத்தினர். தலையில் அடித்து தொந்தரவு கொடுத்தனர். என்னை பைத்தியக்காரன் என, திட்டினர். அதுமட்டுமின்றி பைத்தியம் என, ஒப்புக்கொண்டு கையெழுத்திடும்படி பலவந்தப்படுத்தினர்' என குற்றம்சாட்டினார்.
இதனால் கொதிப்படைந்த பிரயாக் ராஜ், 50 லட்சம் ரூபாய் கேட்டு, ட்ரோன் பிரதாப் மீது, மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். மற்றொரு அதிகாரி 2 கோடி ரூபாய் கேட்டு, மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மனு தொடர்பாக பிப்ரவரி 20ல், விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.
இந்நிலையில் இவர் மீது, மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்த சாரங்க மான் என்பவர், ட்ரோன் தயாரித்து தரும்படி, பிரதாப்பிடம் 35 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆனால், இவர் தரமற்ற ட்ரோன்களை தயாரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் நான்கு ட்ரோன்களை, பிரதாப் கொடுத்தார். ஆனால் இதுவும் வானில் பறக்காமல், கீழே விழுகின்றன. தன்னை பிரதாப் மோசடி செய்ததாக குற்றச்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து, 'எலிமினேட்' ஆகியுள்ளார்.

