ADDED : ஜன 11, 2024 12:07 AM

மும்பை: ''ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான், உண்மையான சிவசேனா. கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க, உத்தவ் தாக்கரேவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது,'' என, மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - - பா.ஜ., - தேசியவாத காங்., அஜித் பவார் தரப்பு கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சிவசேனாவின் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்று விட்டனர்.
இவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த விஷயத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பினர், பரஸ்பரம் தாக்கல் செய்த மனுக்கள் மீது, மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகர் நேற்று அளித்த தீர்ப்பு:
எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்படுகின்றன. எந்த எம்.எல்.ஏ.,வும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுள்ள ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா.
ஷிண்டேவை கட்சியில் இருந்து நீக்க, உத்தவ் தாக்கரேவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. 2022 ஜூன் 21 முதல், சட்டசபையின் சிவசேனா கொறடாவாக பாரத் கோகவாலே தொடர்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக உத்தவ் தாக்கரே தரப்பு தெரிவித்துள்ளது.

