ADDED : ஜூன் 10, 2025 10:18 PM
புதுடில்லி:டில்லியில், ஆட்டோ ரிக் ஷாவில் சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து கைப்பையை பறித்து சென்ற இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிறு அன்று, வடக்கு டில்லியில் உள்ள ரெட் போர்ட் எனும் செங்கோட்டையின் பின்புறம், ஆட்டோ ரிக் ஷாவில் ஒரு முதிய பெண் சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோ ரிக் ஷா அருகில் வந்த ஸ்கூட்டரில் இருந்த நபர்கள், அந்த மூதாட்டியின் கைப்பையை திடீரென பறித்தனர். அதில், 20 ஆயிரம் ரூபாய் இருந்தது.
கைப்பையை விடாமல் பிடித்திருந்ததால், அந்த மூதாட்டி ஓடும் ஆட்டோரிக் ஷாவில் இருந்து கீழே விழுந்தார். அவரிடம் வலுக்கட்டாயமாக கைப்பையை பறித்து, அந்த இருவரும் ஸ்கூட்டரில் தப்பினர்.
புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். கைப்பையை பறித்து சென்றது அர்ஜித் அரோரா, 31, மற்றும் ரவி மாலிக், 33, என்பதை கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கைப்பையை கைப்பற்றினர்.
எனினும், அதில் இருந்த, 20 ஆயிரம் ரூபாயை அந்த கும்பல் கொள்ளையடித்து, வெறும், 6,000 ரூபாயை மட்டுமே வைத்துச் சென்றிருந்தது. அந்த நபர்கள் பயன்படுத்திய ஸ்கூட்டர் திருடப்பட்டது என்பதை, பின்னர் போலீசார் கண்டறிந்தனர்.