இந்திய வரலாற்றின் இருண்ட காலம் அவசரநிலை: பிரதமர் மோடி விமர்சனம்
இந்திய வரலாற்றின் இருண்ட காலம் அவசரநிலை: பிரதமர் மோடி விமர்சனம்
ADDED : ஜூன் 26, 2025 01:27 AM

புதுடில்லி : 'எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை காலத்தில், அரசியலமைப்பு மீறப்பட்டதை எந்தவொரு இந்தியரும் மறக்க மாட்டார்' என, பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மறைந்த பிரதமர் இந்திரா, 1975ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி திடீரென அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.
இதனால், அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த அதிகாரமும் அவர் வசம் வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மொத்தம் 21 மாதங்கள் நீடித்த இந்த அவசரநிலை காலக்கட்டத்தை, ஜனநாயகத்தின் கருப்பு பக்கம் என காங்கிரஸ் அல்லாத அரசியல் கட்சிகள் விமர்சித்தன.
அவசரநிலை அறிவிக்கப்பட்ட தினத்தை, பா.ஜ., கருப்பு தினமாக அனுசரித்து வருகிறது. அவசரநிலை அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், தன் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
இந்திய ஜனநாயக வரலாற்றின் இருண்ட பக்கங்களை நினைவுபடுத்தும் அவசரநிலையின் 50-வது ஆண்டு நாள் இது. இந்திய மக்கள் இந்த நாளை, அரசியலமைப்பு படுகொலை நாளாக நினைவுகூர்கின்றனர்.
இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு வகுத்துக் கொடுத்த மதிப்பீடுகள் புறந்தள்ளப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. ஊடகச் சுதந்திரம் பறிக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், சாமானிய மக்கள் என பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகைய நெருக்கடிகளால் காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தையே சிறை வைத்தது.
நம் அரசியலமைப்பின் ஆன்மா சிதைக்கப்பட்ட விதத்தை இந்தியர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
பார்லிமென்டின் குரல் வெளிவராமல் தடுக்கப்பட்டது. நீதிமன்றங்களையே கட்டுப்படுத்தும் முயற்சிகள்கூட மேற்கொள்ளப்பட்டன. 42-வது சட்டத்திருத்தம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், நலிந்த மக்களே குறிவைக்கப்பட்டனர். அவர்களின் அடையாளம் சிதைக்கப்பட்டது.
பல்வேறு சித்தாத்தங்களை கொண்ட பல தரப்பு மக்களும் அவசரநிலையை எதிர்த்து நின்றனர். அவர்கள் அனைவரும், இந்தியாவின் ஜனநாயக தன்மை காக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் ஒன்றுபட்டனர்.
இந்த நாளில், அவசரநிலையை எதிர்த்து நின்ற ஒவ்வொருவருக்கும் எங்கள் வணக்கத்தை உரித்தாக்குகிறோம்.
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது நான் ஆர்.எஸ்.எஸ்., தொண்டனாக இருந்தேன். அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தில் நான் இருந்தது, எனக்கு மிகப்பெரிய படிப்பினை.
அது, நம் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.