காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
ADDED : செப் 21, 2025 08:06 PM
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்திவார் மாவட்டத்தில் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தோடா - உதம்பூர் பகுதியில் கடந்த 19ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர் ஒருவர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தீவிர தேடுதல் வேட்டை
இதனிடையே பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, ராஷ்ட்ரீய ரைபிள்ஸ், சிஆர்பிஎப், சிறப்பு அதிரடிப்படையினர் அடங்கிய குழுவினர், மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.