மது குடிக்க பணம் தராத மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தந்தை
மது குடிக்க பணம் தராத மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தந்தை
ADDED : ஜன 27, 2024 12:25 AM

காமாட்சிபாளையம்,-மது குடிக்க பணம் தராத மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நர்த்தன் போப்பண்ணா, 32. பெங்களூரு, காமாட்சிபாளையாவில் தந்தை, தாயுடன் வசித்து வந்தார். சில ஆண்டுகளாக இவரது தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக உள்ளார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவரது தந்தை சுரேஷ், தினமும் குடித்துவிட்டு மகனிடம் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வந்த தந்தை சுரேஷ், நர்த்தன் போப்பண்ணாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
பணம் தர மறுத்ததால், மகனை தாக்க சுரேஷ் முயற்சித்தார். அவரை அறை ஒன்றில் தள்ளி வெளியே பூட்டிவிட்டார்.
உள்ளே இருந்தபடி கத்திக் கொண்டிருந்த சுரேஷ், பீரோவில் இருந்த ஒற்றை குழாய் துப்பாக்கியை எடுத்து மகனை சுட்டார்.
போப்பண்ணாவின் தொடையில் குண்டு பாய்ந்தது. தன் சகோதரிக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
அவரது சகோதரியும், உறவினர் ஒருவருக்கு போன் செய்து, அங்கு சென்று பார்க்கச் சொன்னார்.
வீட்டுக்கு வந்த உறவினர், கீழே சரிந்திருந்த நர்த்தனை, பசவேஸ்வராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார், நர்த்தன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அவரது தந்தை சுரேஷ், கதவை உடைத்து வெளியே வந்து தரையில் சிந்தியிருந்த ரத்தத்தை சுத்தம் செய்து, ஆதாரங்களை அழித்துக் கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

