ADDED : மே 24, 2025 08:32 PM

புதுடில்லி:பாவானா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கட்டடம் இடிந்து விழுந்தது.
புதுடில்லி பாவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 4.00 மணிக்கு தீப்பற்றியது.
தகவல் அறிந்து, 17 வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். அந்தப் பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. மேலும், தீ வேகமாக பரவி கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டடம் இடிந்து விழுந்த சத்தம், வெடிகுண்டு வெடித்தது போல கேட்டதால், அந்தப் பகுதியில் வசித்த மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
தீயணைப்புப் படையினர் கரும்புகைக்கும் மத்தியிலும் கடுமையாக மூன்று மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தொழிற்சாலை அருகே குவிந்த கிடந்த குப்பைகளால் தீ மளமளவென பரவியதால், தீயை அணைக்கும் பணி, பெரும் சவாலாக இருந்தது.
இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், தொழிற்சாலை முற்றிலும் நாசம் அடைந்தது.
தீப்பற்றியதற்கான காரணம் குறித்து, போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.