கான்ஸ்டபிள் தேர்வில் மோசடி: ம.பி.,யில் 12 பேர் கைது
கான்ஸ்டபிள் தேர்வில் மோசடி: ம.பி.,யில் 12 பேர் கைது
ADDED : ஜூன் 04, 2025 11:56 PM

போபால்: மத்திய பிரதேசத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
ம.பி.,யில் போலீஸ் கான்ஸ்டபிள் பணியில் காலியாக உள்ள, 7,411 பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 9.7 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2023, ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் தேர்வு நடந்தது. 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் இருந்து, 7,411 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
சந்தேகம்
இதற்கிடையே, கடந்த அக்டோபரில் உடற்தகுதி தேர்வுக்கு முன்னதாக விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதில், ஒரு சில மாணவர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் கைரேகை விபரங்களை அடிக்கடி மாற்றியிருந்தது சந்தேகத்தை எழுப்பியது.
தேர்வு எழுதும் நபரின் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் மற்றும் கைரேகை மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக வேறொரு நபர் தேர்வு எழுதி உள்ளார்.
முடிவுகள் வெளியானதும் மீண்டும் பழையபடி புகைப்படமும், கைரேகையும் மாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
எழுத்துத் தேர்வில் மட்டுமே இந்த மோசடி நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக போலி தேர்வர்கள், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களிடம் இருந்து 4 - 5 லட்சம் ரூபாய் வரை பெற்றதும் வெளிச்சத்துக்கு வந்தது.
ம.பி.,யின் பீதாவர், மொரேனா, ஷியோபூர் மாவட்டங்களில் உள்ள ஆதார் மையங்கள் வாயிலாக ஆதார் அட்டை மற்றும் கைரேகை மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
இதையடுத்து, போலி தேர்வர்கள், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட விண்ணப்பதாரர்கள், ஆதார் மையத்தைச் சேர்ந்தவர்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 100 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது--.
இதில், கைது செய்யப்பட்ட ஒருவர், 100க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் விபரங்களை மாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மத்திய பிரதேசம் மட்டுமின்றி பீஹார், உ.பி., ஜார்க்கண்ட், டில்லி உட்பட பல்வேறு இடங்களில் இந்த மோசடி அரங்கேறியதை அடுத்து, அங்குள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.