ADDED : மே 29, 2025 11:48 PM

ஜெய்ப்பூர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குல் மற்றும் ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை தொடர்ந்து, நம் பாதுகாப்பு படைகளும், புலனாய்வு அமைப்புகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஷாகுர் கான் என்பவர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறையில் அவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் காங்., முன்னாள் அமைச்சர் ஷாலே முகமதுவின் உதவி யாளராக பணியாற்றி ராஜினாமா செய்தவர்.
ஷாகுர் கானின் நடவடிக்கைகளில் உளவுத்துறையினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அவரது மொபைல் போன் உரையாடல்களை கண்காணித்து வந்தனர். அப்போது அவர், சில பாகிஸ்தானியர்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமில்லாமல், இஸ்லாமாபாத்துக்கு ஏழு முறை சென்று வந்ததையும் அவர் ஒப்புக்கொண்டு உள்ளார்.
ஷாகுர் கானின் மொபைல் போனில் பல பதிவுகள் நீக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு அமைப்புகள் அவர் தொலைபேசி பதிவுகள், பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருகின்றன. ஜெய்ப்பூரில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.