பெங்களூருவில் கொட்டிய கனமழை; மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி!
பெங்களூருவில் கொட்டிய கனமழை; மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி!
UPDATED : மே 19, 2025 02:04 PM
ADDED : மே 19, 2025 01:15 PM

பெங்களூரு: பெங்களூரு மாநகரில் நேற்று மாலை கனமழை கொட்டியது. இதில் பெருக்கெடுத்த வெள்ளநீர், சாக்கடை கழிவு நீருடன் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சுவர் இடிந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார்.
கர்நாடகா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. தலைநகர் பெங்களூருவின் பெரும்பாலான பகுதிகளில் மழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. மழையால் பெருக்கெடுத்த வெள்ளநீரும், சாக்கடை கழிவு நீரும் கலந்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கியது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாத, பைக், கார்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
பொதுமக்கள் நலன் கருதி, மாநில அரசு சார்பில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களுக்கு படகுகள் இயக்கப்படுகின்றன. மாநில அரசை விமர்சனம் செய்யும் வகையில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கடுமையான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
பொதுமக்களை சமாதானம் செய்யும் வகையில் துணை முதல்வர் சிவக்குமார் வெளியிட்ட பதிவில், ''தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கவலை அளிக்கிறது. நிலைமையை கண்காணித்து வருகிறேன். அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். நிலைமையை சீராக்க 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்,'' என்று கூறியுள்ளார்.
பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா வெளியிட்ட பதிவில், ''பல்லாண்டுகளாக நகர உட்கட்டமைப்பு வசதியை சீர் செய்யாமல் இருந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.
நல்ல சாலைகள், வடிகால் வசதிகள் செய்ய வேண்டும். முக்கிய இடங்களில் தண்ணீரை உறிஞ்சும் வசதிகள் செய்ய வேண்டும். காரணங்களை ஏற்க முடியாது. உடனடியாக வேலை நடக்க வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.
பெங்களூரு நகரில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 105.5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சாம்ராஜ் நகரில் 88, கனகபுராவில் 78, பெங்களூரு எச்.ஏ.எல்., 78, நாராயணபுராவில் 65, மைசூருவில் 35 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
பெண் உயிரிழப்பு
கனமழை காரணமாக, பெங்களூரு, மகாதேவபுராவில் தனியார் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்து பெண் தூய்மை பணியாளர் உயிரிழந்தார்.