வரலாற்று திருப்புமுனை; கார்கில் போரை நினைவுகூர்ந்த விமானப்படை
வரலாற்று திருப்புமுனை; கார்கில் போரை நினைவுகூர்ந்த விமானப்படை
ADDED : மே 26, 2025 12:05 PM

புதுடில்லி: கார்கில் போரின் போது, போர் விமானங்களின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்த இந்திய விமானப்படை, 'வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த தருணம்' எனக் குறிப்பிட்டுள்ளது.
1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. மிக உயரமான மலைத் தொடரில் பெரும் சவால்களுக்கு மத்தியில் நடந்த இந்தப் போரில், ' ஆபரேஷன் சாகர்' என்ற பெயரில் இந்திய விமானப் படையினர் தாக்குதல் நடத்தியது. சுமார் 3 மாதங்கள் நீடித்த இந்தப் போரில், இந்திய விமானப் படையினரின் பங்கு முக்கியமானதாகும்.
இந்த நிலையில், கார்கில் போரில் விமானப் படையினரின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்து, அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், '1971ம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் போருக்குப் பிறகு, காஷ்மீர் பகுதியில் மிகப்பெரிய அளவில் விமானப் படையினர் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்பாக, உயரமான மலைப் பிரதேசங்களில் விமானப் படை இதுபோன்ற ஆபரேஷன்களை மேற்கொண்டது இல்லை. விமானப் படை வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகும்,' எனக் குறிப்பிட்டது.
மேலும், மிராஜ் 2000எஸ், மிக் 21எஸ், மிக் 17எஸ், ஜாகுவார்ஸ், மிக் 23எஸ், மிக் 27எஸ், சீட்டாக், மிக் 29எஸ் போன்ற போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சாகரை தொடர்ந்து, கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற ஆபரேஷனில் இந்திய விமானப் படையினர் திறம்பட செயல்பட்டது பாராட்டுக்குரியது.