ADDED : பிப் 24, 2024 04:06 AM

பெங்களூரு: ''ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற, ஜனார்த்தன ரெட்டியிடமும் ஆதரவு கேட்பேன்,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
டில்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், குமாரசாமி என்ன பேசினார் என்பது, எங்களுக்கு தெரியும். ராஜ்யசபா தேர்தலை ஒட்டி, திங்கட்கிழமை இரவு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கோரப்படும். ஜனார்த்தன ரெட்டியிடமும் ஆதரவு கேட்பேன். பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது, மாநிலத்தின் பிரச்னைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் என்றார்.
ஆனால் நாங்கள் டில்லியில் நடத்திய போராட்டத்திற்கு, அவர்கள் ஆதரவு தரவில்லை. பா.ஜ., ஆட்சியில் 40 சதவீத கமிஷன் தொடர்பாக, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக எனக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

