ஊடுருவல்காரர்களை வெளியேற்றாமல் விட மாட்டேன்; பீஹாரில் பிரதமர் மோடி சவால்
ஊடுருவல்காரர்களை வெளியேற்றாமல் விட மாட்டேன்; பீஹாரில் பிரதமர் மோடி சவால்
UPDATED : செப் 16, 2025 10:33 AM
ADDED : செப் 16, 2025 06:30 AM

பூர்ணியா: ''பீஹாரில் உள்ள ஊடுருவல்காரர்கள் நாட்டை விட்டு நிச்சயமாக வெளியேற்றப்படுவர். இதில் எந்த சமரசமும் இல்லை. முடிந்தால் இதை தடுத்து பாருங்கள்,'' என, காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணிக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்தார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்., நவம்பரில் தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பீஹாரின் பூர்ணியா மாவட்டத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, 36,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.
பொறுப்பு தொடர்ந்து பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் கிழக்கு மாநிலங்களில், ஊடுருவல்காரர்களால் மக்கள் தொகையில் ஒரு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.பீஹார், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் மக்கள், தங்களின் மகள்கள் மற்றும் சகோதரியரின் பாதுகாப்பு பற்றி மிகவும் கவலைப்படுகின்றனர்.
பூர்ணியா மண்ணில் இருந்து அவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள நிர்வாகிகளே, தயவுசெய்து காது கொடுத்து கேளுங்கள். ஊடுருவல்காரர்கள் யாராக இருந்தாலும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர்களை வெளியேற்றுவது, தேசிய ஜனநாயக கூட்டணியின் பொறுப்பு. ஊடுருவல்காரர்களை காப்பாற்ற காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி முயற்சிக்கிறது.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு ஆதரவாக, சிறிதும் வெட்கமின்றி அந்த கூட்டணியின் தலைவர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். இதைவிட கேவலம் வேறு என்ன இருக்க முடியும்? இது போன்ற சுயநலவாதிகள், பீஹார் மற்றும் நாட்டின் வளங்களையும், பாதுகாப்பையும் ஆபத்தில் சிக்க வைக்கின்றனர். ஊடுருவல்காரர்களை காப்பாற்ற காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி எவ்வளவு முயற்சி செய்தாலும், எங்களது நடவடிக்கை தொடரும்.
இது மோடியின் உத்தரவாதம். முடிந்தால், அக்கூட்டணி தடுத்து பார்க்கட்டும். ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக முழக்கமிடும் காங்., கூட்டணிக்கு, வரும் சட்டசபை தேர்தலில் பீஹார் மக்கள் தக்க பதிலடி கொடுப்பர். புறக்கணிப்பு சமீபத்தில், பீடியுடன் பீஹாரை ஒப்பிட்டு ஒட்டுமொத்த மாநிலத்தையே காங்., அவமதித்தது. இது ஒன்றும் அக்கட்சிக்கு புதிதல்ல. காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி பல ஆண்டுகளாக பீஹாரையும், அதன் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
எங்களது இரட்டை இன்ஜின் அரசால், பல்வேறு துறைகளில் பீஹார் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை காங்., கூட்டணியால் ஜீரணிக்க முடியவில்லை. அக்கூட்டணியினரை பீஹார் மக்கள் புறக்கணிக்கின்றனர். வரும் தேர்தலிலும் நிச்சயம் புறக்கணிப்பர். இவ்வாறு அவர் பேசினார்.

