மும்பையில் சட்டவிரோத பைக் டாக்சி: பயணியாக மாறி கண்டுபிடித்த அமைச்சர்
மும்பையில் சட்டவிரோத பைக் டாக்சி: பயணியாக மாறி கண்டுபிடித்த அமைச்சர்
ADDED : ஜூலை 04, 2025 12:18 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், பயணி போல நடித்து, சட்டவிரோதமாக, 'பைக் டாக்சி'கள் இயக்கப்படுவதை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் கண்டுபிடித்தார்.
மஹாராஷ்டிராவில், 'பைக் டாக்சி' எனப்படும், இருசக்கர வாகன பொதுப் போக்குவரத்துக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கென தனியாக விதிகள் இல்லாததாலும், பயணியரின் பாதுகாப்பு கருதியும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், மும்பையில் பைக் டாக்சி சேவைகள் இயங்குவதாக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்குக்கு சந்தேகம் ஏற்பட்டது; அதை அவரது துறை அதிகாரிகள் மறுத்தனர்.
உண்மையை கண்டறிய அமைச்சரே களத்தில் இறங்கினார். தன், 'மொபைல் போன்' வாயிலாக, 'ரேபிடோ பைக் டாக்சி'யை வேறு நபர் பெயரில், 'புக்' செய்தார். அடுத்த சில நிமிடங்களில், மந்த்ராலயம் எனப்படும் மாநில தலைமை செயலகம் முன் பைக் டாக்சி வந்தது.
ஓட்டுநரிடம் சென்ற அமைச்சர், அவரிடம் 500 ரூபாய் அளித்தார். அதை ஏற்க மறுத்த ஓட்டுநரிடம் தான் போக்குவரத்து துறை அமைச்சர் என, பிரதாப் சர்நாயக் அறிமுகம் செய்து கொண்டார்.
பின், “நீங்கள் சட்டவிரோதமாக பைக் டாக்சியை இயக்குகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?” எனக் கேட்டார். ஓட்டுநர் மன்னிப்பு கேட்டதும், “உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வது எங்கள் நோக்கமல்ல.
''இந்த பைக் டாக்சியை இயக்குவதன் பின்னணியில் இருப்பவரை கண்டுபிடித்து தண்டனை வழங்குவதே நோக்கம்,” என தெரிவித்த அமைச்சர், ஓட்டுநரை அனுப்பி வைத்தார்.
அதன்பின், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.